மூன்று கவிதைகள்
நட்சத்ரன்
1.புதிரொலி
மிகவும் வினோதமாயிருக்கிறது
எங்கிருந்தோ வருமிந்த
அநாதி ஒலி
அவ்வொலியுள்
தெளிவான சொல்லேதும்
ஒளிந்திருக்கவில்லை
ஆயினும் அதனுள்
ஏதோவோர் அர்த்தம்
இருப்பதாய்ப்படுகிறது
இந்த ஒலிக்கு
என்னபேர் வைப்பது
இது
முனகலா கத்தலா
இசையா கூக்குரலா
கொடுவலியின் ஒலிவடிவா
இன்பப் பிதற்றலா
அடர்கசப்பின் வெளிப்பாடா
அதிருசிப்பின் துள்ளலா
பறவையொன்றின் கூவலா
பூச்சியொன்றின் அனர்த்தலா
வானப்பரப்பில்
தானாய்ப்பிறந்த
ஆதிமூலம் இதுவோ
அர்த்தமேதுமற்று
சுயம்பாய்
என் உள்ளும் வெளியுமாய் பிரவகிக்கும்
இப்புதிரொலி
முளைத்துத் துளிர்த்துப் பூத்து மலர்கிறது என்னுள்
பெயரில்லாததொரு
விருட்சமாய்.
2.கதைசொல்லி விருட்சம்
தத்தம் கிளையசைத்து
வான்பரப்பில் கதைசொல்லும்
விருட்சங்கள்
விருட்சத்தின் கதைகளை
வாய்பிளந்துகேட்கும்
அகண்டாகார அண்டம்
அநாதிகாலமாய்
பரவெளியில் சிதறிக்கிடக்கும்
விருட்சங்களின் கதைகள்
எண்ணற்ற ரகசியங்களோடு
அக்கதைகளில்
பேரொளியின்
அதீத தாண்டவம்
நிழலோடு நிகழும்
அக்கதைகளில்
பூக்களின் வாசம்
மகரந்தக்கதப்போடு வீசும்
அக்கதைகளினூடாய்
புல்லினங்களின்
அதீதபாடல் கேட்கும்
அக்கதைகளினூடாய்
கொடுவிலங்குகளின் ஸப்தம்
இரைந்துகேட்கும்
……………..
……………..
விருட்சங்களின் கதைகள்
முடிவதேயில்லை
காலத்தின் எந்தப்புள்ளியிலும்
விருட்சங்கள் வாழ்கின்றன
உங்களுக்கான
கதைகளுக்காய்
எனக்கான
கதைகளுக்காய்
விலங்கினங்களுக்கானதும்
புல்லினங்களுக்கானதுமான
கதைகளுக்காய்
வாருங்கள் அமர்வோம்
ஓர் அடர்விருட்ச நிழலில்
காலம்முழுக்க
கதைகேட்டிருக்க.
3.இருட்குகை வாழ்க்கை (நெடுங்கவிதை)
அகண்டுநீண்ட
பேரிருட்குகையுள்
ஜீவிக்கிறானவன்
அவன் தன்
கண்ணொளியிழந்து
வெகுகாலமாயிற்று
தன் சொந்தக்குரலையும்
காலத்தின் அகண்டவெளியில்
தொலைத்துவிட்டு
பூச்சிகளின் குரலில்
அனர்த்தித்திரிகிறான்
கால்களோ சிறகுகளோ
அவனுக்கில்லை:
வெறும் சதைப்பிண்டமாய்
ஊரித்திரிகிறானவன்
சொதசொதப்பான குகைச்சேற்றில்
கருநாகம் தேள்
விஷவண்டுகள் சூழ
இருக்குதவன் இருப்பு
கோட்டானும் ஆந்தையும்
கூக்குரலிட்டுலவும்
இக்குகையுள்
எல்லா மிருகமும்
இரைதேடி அலையும்
குருதிப்பசியோடு
கொக்கரித்தாடும் பிசாசங்களின்
நாட்டிய அரங்கம்
இக்குகை
குகையிருள் சுவாசித்து
குகையிருளுண்டு
குழம்பித்திரிகிறனவன்
பின்
ஒளிகாணா குகைச்சுவரில்
ஒட்டியூர்ந்து
நகரத்தொடங்குகிறான்
கருத்துக்கிடக்கும்
விஷநீரில்
விழுந்தெழுந்து
நிகழ்கிறதவன் நகர்வு
ஒளியின் வெம்மையை
துய்த்திடும் முனைப்பில்
விஷ ஜந்துக்கு
இரையாகிடாமல்
பதுங்கிப்பதுங்கி நகர்கிறான்
குகைவாயில் நோக்கி
குகைவாயிலில்
அவனுக்கு
கூரிய கண்ணொளிகிட்டும்:
பின்பு அவன்
எல்லையில்லா ஒளிவெளியுள்
நீந்தித்திரிவான்
குகைவாயிலில் அவனுக்கு
எல்லா அவயவமும்
மீண்டும் முளைக்கும்:
பின்பு அவன்
அண்டம் குலுங்க
ஆனந்த நடமிடுவான்
குகைவாயிலில் அவனுக்கு
வலிய சிறகுகள் வளரும்:
பின்பு அவன்
மயக்கும் பெருவெளியில்
இலக்கற்றுப் பறப்பான்
குகைவாயிலில்
அவன் தன் இழந்தகுரலை
மீட்டெடுத்து
விதவித ராகங்களில்
பாடித்திரிவான்
ஆதலின்..
அதீத கவனத்துடன்
மெதுமெதுவாய் நகர்கிறானவன்
காலத்தின்
பேரிருட்குகையும்
தன் நீளம்சுருக்கி
நகர்த்தித்தள்ளுதவனை
ஒளிவெளி நோக்கி.
——————————————————-
- விடியும்!-நாவல்- (33)
- நீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் -4
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று
- சவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம்
- ஒன்னெ ஒன்னு
- வேறொரு சமூகம்
- ஒரு புகைப்படமும், சில சிந்தனைகளும்
- வாரபலன் –
- கல்லட்டியல்
- பொன்னம்மாவுக்குக் கல்யாணம்
- கரிகாலன்
- ம(ை)றந்த நிஜங்கள்
- மூன்று கவிதைகள்
- தமிழ் அமிலம்
- மறு உயிர்ப்பு
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -9)
- கறுத்த மேகம் வெளுக்கின்றது
- என்னை என்ன
- எனக்குப் பிடித்த கதைகள் – 96 – பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் ‘சசாங்கனின் ஆவி ‘
- மெக்ஸிகோ நகரைத் தாக்கிய மிகப் பெரும் பூகம்பமும், சுனாமி [Tsunami] கடற்பொங்கு அலைகளும்! [1985]
- க்வாண்டம் இடம்-பெயர்த்தல்
- பெண்கள்
- அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை
- விருமாண்டி – ஒரு காலப் பார்வை..!
- சாகித்ய அகாதெமியின் சார்பில் மூன்று நாள் இலக்கிய விமர்சனக் கருத்தரங்கு
- புதுக்கவிதையின் வழித்தடங்கள்
- ஒரு விருதும் நாவல் புனைவிலக்கியமும்
- பெற்றோர் பிள்ளைகள் இடையே தலைமுறை இடைவெளி குறையுமா ?
- இலக்கியப் பற்றாக்குறை
- சண்டியர் மற்றும் விருமாண்டி – முன்னும் பின்னும் சில பார்வைகள் மற்றும் பதிவுகள்
- கடிதங்கள் – ஜனவரி 29,2004
- எமக்குத் தொழில் டுபாக்கூர்
- எழுத்தாளர் விழா 2004- ஒரு கண்ணோட்டம்
- பங்களாதேஷ் அரசுகள் தொடர்ந்து நசுக்கும் மதச்சிறுபான்மையினர்
- சென்ற வாரங்கள் அப்படி… (பரிசோதனை, சோதனை, பரிபோல வேகம், பரி வியாபாரம், வேதனை, சாதனை, நாசம்)
- பாண்டிச்சேரி நாட்கள்!
- அன்புடன் இதயம் – 5 – வேங்கூவர் – கனடா
- சொல்வதெப்படியோ
- ஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை
- சரணாகதி
- தடுத்து விடு
- இன்னும் காயாமல் கொஞ்சம்!!
- நம்பிக்கை இழந்துவிட்டேன் நாராயணா..
- முத்தம் குறித்த கவிதைகள்
- பிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்