காதலன்

This entry is part of 45 in the series 20040122_Issue

பசுபதி


வாலையின் கண்ணிமை மென்மையைப் போல,
. மங்கையின் முத்துப்பல் வெண்மையைப் போலக்
காலை உதித்திடக் கட்டளை இட்டவன்
. கட்டாயம் அவனொரு காதலன் தானய்யா! (1)

குறைகளும் குற்றமும் கொண்டவோர் அன்பன்மேல்
. கோபமுறு காதலி கொட்டிடும் கண்ணீர்போல்,
திரைகடல் நீரில் கரிக்கும் வெறுப்பைச்
. சேர்த்தவன் உறுதியாய்க் காதலன் தானய்யா! (2)

பொங்கிடும் காதலின் பித்துடன் தன்னுயிர்ப்
. பூவை இசைக்கையில் புவனம் படைத்தவன்,
மங்கையின் ஆத்மாவை வசந்தச் சிரிப்பினில்
. வைத்தவன் நிச்சயமோர் காதலன் தானய்யா! (3)

மடந்தை ஒருத்தியின் மந்திரக் கட்டினில்
. மயங்கியே போனவன்; மங்காத் துயரமும்,
அடங்காத தாகமுள்ள அணங்காய்க் கோடையை
. ஆக்கியவன் ஐயமின்றிக் காதலன் தானய்யா! (4)

சோலையில் சுனைகளைச் சூழ்ந்திடும் மரங்களைச்
. சுந்தர மங்கையர் உருவினில் ஆக்கியே
கோல இலைகளில் கூந்தலின் காந்தியைக்
. கொணர்ந்தவன் உண்மையில் காதலன் தானய்யா! (5)

வனப்புடை மலர்களின் வளர்ச்சியில் அறியலாம்;
. வாலையின் கண்களை வனசத்தில் பார்க்கலாம்
இனிப்பிதழ் செம்மையை ரோஜாவில் சுட்டலாம்;
. இவற்றைப் படைத்தவனோர் காதலன் தானய்யா! (6)

[ஷா நீல்ஸனின் ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்]

~*~o0O0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation