புதிய கோவில் கட்டி முடியுமா ?

This entry is part of 44 in the series 20040115_Issue

செங்காளி


சிங்கை வலசென்னும் சின்னஞ்சிறு கிராமமது.
அங்கிருந்த பழையவொரு ஆலயத்தின் கதையேவிது.
பலநூறு ஆண்டுகளைப் பார்த்துவிட்ட கோவிலது.
தளம்பெயர்ந்து சுவரிடிந்து தடுமாறி நின்றதது.

கோவிலின் நிலைகண்ட கிராமத்துப் பெரியோர்கள்
கூவியழைத்து மக்களைத்தான் கூட்டமொன்று போட்டனரே.
தக்கபடி கோவிலொன்றைத் தரமாகக் கட்டிடவே
அக்கனமே வேலைகளை ஆரம்பிக் கவேண்டுமென்று,

அனைவருமே ஒன்றுசேர்ந்து அமைத்தனரே ஒருகுழுவை.
இணைந்து செயல்படவே இசைந்திட்ட உறுப்பினர்கள்,
எவ்வாறு கட்டுவது எங்கேதான் கட்டுவது
எவ்வளவு செலவாகும் என்றெல்லாம் ஆராய்ந்து

மணிக்கணக்கில் பேசிவிட்டு மாறுதல்கள் பலசெய்து
மணியான திட்டமொன்றை மக்கள்முன் வைத்தனரே.
‘நன்றாக கேட்டிடுவீர் நாங்கள் சொல்வதைத்தான்
மூன்று காரியங்கள் முக்கியமாய்ச் செய்யவேண்டும்,

இப்போது கோவில்தான் இருக்கும் இடத்திலேயே
தப்பாது புதியதொன்றைத் திடமாகக் கட்டவேண்டும்.
பழையதின் கற்களையே பிரித்தெடுத்துச் செலவின்றிப்
புதியதைக் கட்டிடவே பயன்படுத்த வேண்டும்நாம்.

கோவிலைக்கட் டிமுடித்து குடமுழுக்கு நடத்தும்வரை
அதிகாலைப் பூசைமுதல் அந்திவேலைப் பூசையெல்லாம்
பழையதிலே தொடர்ந்து பாங்குடனே நடத்தவேண்டும்,
பிழையில்லைத் திட்டத்தில் புரிந்துகொள்வீர் ‘ என்றனரே.

————————————————————————

natesasabapathy@yahoo.com

Series Navigation