அம்மாவே ஆலயம்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

சத்தி சக்திதாசன்


பொழுது புலர்ந்தது
சூரியன்
தன் உலாவை ஆரம்பித்தது
விட்டான்

என்னிதயத்தில் இன்று
ஏனிந்த
கனமான உணர்வு !

ஓ !

என்னிதய தெய்வத்தின்
ஆராதனை தினமா ?
அம்மா
உன்னை நான்
ஆராதிக்காத
தினமேயில்லையே

பின் எப்படி ?

இன்று என்னும்
இந்நாள்
மட்டும்
உன் நினைவிற்கு
இத்துனை விலை
நிர்ணயித்தது

ஓ !

உன்னை ஆண்டவன்
எனும்
அந்தக் கடன்காரன்
வசூலித்துக் கொண்ட
கரி நாளா ?

நான் வாங்கிய
கடனுக்கு
உனதுயிரை ஈடாக
நானெழுதவில்லையே !

என் இதய தெய்வமே !

உன் குழந்தைகளின்
பாபத்தை
உன் கரங்களில்
வாங்கிக் கொண்டு
உன்னையே நீ
கொடுத்துவிட்டாயா ?

மங்கலக் குங்குமம்
புன்னைகை
தவழும் அமைதி
பூத்த முகம்
அம்மா
இவைதானே என்னெஞ்சில்
நீ பதித்த உன்
நிழற்படம்

வைகைக்கு அணைபோட்டோர்
உன் பாசத்திற்கு
அணை போடமுயன்று
தோற்றிருப்பர்

வருடங்கள்
ஜந்து
உருண்டோடி
விட்டாலும்
என் இதய தீபமே !
என் மனமெனும்
உன் ஆலயத்தில்
பூஜை உனக்கு
நடக்காத
நாளில்லையம்மா

இனி ஒரு
பிறப்பெடுத்தால்
தாயே உன் மகனாக
வேண்டாம்
உன் நாயாக
நான் வாழ்ந்து
நன்றிக்கடனடைக்க
அருள்புரிவாய்
அன்னையே !
——————————
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்