கால ரதம்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

பசுபதி


கால ரதம்வேண்டும் — இறைவா!
கால ரதம்வேண்டும் !

சோலைக் கிளிமொழியாள்– உடலெரி
. . சூட்டில் சிடுசிடுத்தாள் — அணியக்
கோல நகைபலவும் — கொடுத்தால்
. . கோபம் குறையுமென்றாள்! — இன்றைய
ஞால வலம்வந்தேன் — அணிகலன்
. . நல்ல வைகிட்டவில்லை — அதனால்
காலைக் கதிர்வேகம் — கொண்டுபழங்
. . காலம் பயணிக்க (கால)

வங்கக் கடலலைபோல் — செல்வங்கள்
. . பொங்கு பழங்காலம் — நாட்டில்
தங்கம் மணிகுவிந்த — கடைகளைத்
. . தாண்டி நடந்திடுவேன் — மெய்யொளி
மங்கும் நவமணிகள் — அவற்றை
. . வாங்க மனமில்லை — என்றன்
நங்கைக் குயர்நகைகள் — எக்காலம்
. . நாடி அடைந்திடுவேன் (கால)

ஆடிப் பதினெட்டில் — மற்றும்
. . ஆடும் சுவாலைகளில் — புலவர்
சாடும் சுவடிகளை — மின்னெனத்
. . தாவிப் பலமீட்பேன்– அந்தச்
சூடா மணிகளையே — என்றன்
. . சொர்ணத் தமிழ்க்குமரி — மகிழ்வுடன்
சூடிச் சினங்குறைவாள் — தமிங்கிலச்
. . சூட்டைத் தணித்திடுவேன் . (கால)

~*~*~o0O0o~*~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி