புத்தாண்டே வருகவே

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

பவளமணி பிரகாசம்


அரும்பாய் இருக்கும் கொடியிலே
அந்தியில் அவிழும் நொடியிலே
அதிசயம் இல்லா வாடிக்கை
அதிலேயென்ன வேடிக்கை
நேராய் அந்த வாசம் பரப்பும்
நெஞ்சில் ஒரு வித பரவசம்
நிலையாய் அதிலே ஒரு சுகம்
நித்தம் நடக்கும் நாடகம்
புதிது இல்லா போதிலும்
புதுமையானதோர் மயக்கம்
தோன்றத் தவறுவதில்லை
ஏனென்று தெரிவதில்லை

ஈராறு மாதங்கள் முடிவதும்
அடுத்த ஆண்டு பிறப்பதும்
இயல்பானதோர் சரித்திரம்
சுழன்றிடும் காலச் சக்கரம்
முதல் நாளுக்கோர் கவர்ச்சி
முழுமையான மன மகிழ்ச்சி
அலையாய் புதிய ஆசைகள்
வெற்றியின் தூர ஓசைகள்
நேற்று கண்ட சோதனை
மாற்றும் புதிய சாதனை
கனவுகள் எட்டும் சாத்தியம்
கண்ணில் தெரிவது சத்தியம்

இரண்டாயிரத்தாண்டுத் தருவின்
மூன்றாண்டு முடிகின்ற தளிரே
புத்தாண்டே வருகவே
புது வலிமை தருகவே
பன்னீராய் மணக்கவே
பல நன்மை தருகவே
சந்தனமாய் குளிர்கவே
சந்ததிகள் திளைக்கவே
அகக்கண்கள் திறக்கவே
அருமருந்தாய் வருகவே
அகிலமெலாம் தழைக்கவே
அமைதியினை தருகவே
———————————————————
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்