கவிதைகள்

This entry is part of 46 in the series 20031218_Issue

மோனிகா


இனி சிட்டுக்குருவிகளிிடமிருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை

என் முன்னே ..
சன்னலின் வழியே சின்னக்குருவிதட்ட
சுக்குநூராய் போன கண்ணாடியூடே

நான் என்று உணர்ந்த நான்
நானாகிப்போன நான்
என் முகவெட்டும் புகைப்படமும்
என் கொங்கைகளும் தாய்மைப்பசியும்
மனவெளியும் ஒவியமும்
இன்னும் பலவும்.

பிணி கொண்டலையும் புலியைப்போல
அனுபவம் மதர்த்த தனிமைதேடலில்
நான் பெரிய மிகப்பெரிய
போரில் புஜம் தட்டும் பகவானேபோல
என் முன்னே..

மரமாய், கிளையாய், மதில் சுவராய்,
கற்றூணாய், காகிதமாய்

எனக்குவெளியே
எதிரொலி மறுத்த நிஜமாய் ..
பறந்து சென்ற குருவி அற்ியாத ரகசியமாய்.
சொல்லின் பொருளுக்கப்பால்
செயலாய் சுயமுற்றெழுந்த நான்
இனி சிட்டுக்குருவிகளிடமிருந்து
கற்பதற்கொன்றுமில்லை.

-மோனிகா

வாமனப்பிரஸ்த்தம்

அப்பாவுக்கு போன்சாய்களைப்
பிடிக்காது.
அம்மாவின் பிறந்தகத்தை
குந்தகம் சொல்வார்.
ஓவியம் தெரிந்தும் அம்மா
வரைய மட்டாள்.
பாடத்தெரிந்தும் லவகுசா
மட்டுமே பாடி கண்ணீர் துளிர்ப்பாள்
அம்மாவின் செருப்பு எப்போதும்
குழந்தைகளின் அளவுகள் நடுவே.
நாற்பது வயதில் நடு வீட்டில்
கோலி விளையாடும் குழந்தையானாள்.
வாமனப்பிரஸ்த்தமாம் போன்ஸாய்கள்.
அப்பாவுக்கு போன்ஸாய்கள்
பிடிக்காது.

-மோனிகா

காதல் கொண்டு செல்

களம் பெரிது.
கையகப்பட்ட வாழ்க்கையும் அதுவே.
நிலவு, நித்திரை, நேற்றிரவு கண்ட
மொட்டை மாடியென
நினைவு பொய்யில்லை.
நெருஞ்சியென நீர்க்கோர்த்துப்
பருத்துக் கிடக்கும்
கனவும் அப்படித்தான்.

நினைவுகள் கனவுண்டு
நகருகையில் நீண்டு நீண்டு
நெருங்க முடியாமல் ஒடும்
நாட்குறிப்பு.
குறிக்க நாளா இல்லை
கொண்டா கொண்டாவென
களம் வெரியும் காற்றேபோல்.
நினைவுகள் பெரிதாகிப்
பின் நாட்குறிப்பை
கிழித்துக்கொண்டு கொட்டும்.
வருகின்ற நாட்கள் முட்டித்தலை சாய்க்க
கடந்ததன் நகமாய் காலம்
பிடித்துந்த, கழிவிரக்கம்
கொண்டு சொல்லும்
காதல் கொண்டு செல் என.

-மோனிகா

அழகிகள் உறங்கும் நகரம்

இரவு நேரத்தில் ஒலி எழுப்புவதாய்
தோன்றிற்று இந்த அலமாரி.
கட்டிவைக்கப்பட்ட உலகங்களாய்
தோன்றின புத்தகங்கள்.
சொல்லும் கருத்தும் தாண்டி
வடிவுற்று வியாபித்த செவ்வகங்கள்.
புதியன கொண்ட வாசனை,
பழையன கொண்ட பூச்சி வாசம்,
அட்டை கிழிந்து தொங்கும் அழகு,
நூலகத்திலிருந்து தப்பி வந்தவை,
நண்பர்கலிடம் திருப்பித்தராதவை
என
நித்திரை கொள்ளுமுன் பார்த்தேன்
எனது அலமாரி,
அழகிகள் உறங்கும் நகரம் என.

-மோனிகா

பாலத்தின் கீழ் நிற்கும் ஒற்றை மரம்

இப்படியே நின்றது அன்றும்
இரவிரவாய் காயும் நிலவு
ந்ிற்காமல் ஒடும் நீர்நிலையென.
இன்று காணக்கிடக்கிறது
மணற்படுகை.
நடுவிலுள்ள பாலம்.
பாலம் சுமக்கும் மக்கள்
மணற்கடலில் நிலாச்சோறுண்டு
மரத்து உச்சி நிலவில் காதல் பேச
பாலம் கனவு மரம் உண்மை.
ஒற்றை மரக் கிழிக்குஞ்சு
உயரப் பறக்கும் கனவுகள்
உரக்கக்கத்தியும் தொலைவுகளில் மணல்வெளி.
ஒற்றை மரமும் கனவு
மணல்வெளிபோல்.

-மோனிகா

மெளனம் – சாத்தியம்

வெற்றுத்தாளென ஒரு
ஒற்றைத்தாளை
பார்க்கையில் விளையும்
சந்தோசம் ஏன்
ஒரு வெற்று நாளின்
வெறுமையை கவலைக்கிடமாக்குகிறது.

பொருளற்ற அறையின்
எதிரொலிச் சாத்தியம்
மனதிற்கும் வாய்க்கையில்
மெளனம்தான் அரவம்.
புற்றின் வெறுமை – காற்றோட்டம்
புதிய பரிணாமம் – வளர்ச்சி.
வெற்றுத்தாளின் முன் மட்டுமே
எண்ணற்ற சாத்தியம்.

-மோனிகா.
—————————————
monikhaa@hotmail.com

Series Navigation