பாரதீ

This entry is part of 53 in the series 20031127_Issue

நெப்போலியன்,சிங்கப்பூர்


கொஞ்சம்
லஞ்சமாய்
கொஞ்சம்
காணி நிலம்.

அடுத்தவன்
வயிற்றையும்
ஆஸ்தியையும்
பற்ற வைக்க
நிறைய அக்கினிக் குஞ்சுகள்.

நிரந்தரமாய்
ஒப்பாரி கூவக்
குயில்கள்.

நந்தலாலாவின்
சிறகுகளில்
காக்கை இரத்தம்
மின்ன…
விரல்கள்
பலவந்தமாய்
தீக்குள் முக்கப்பட்டு
கரிக்கட்டைகளாய்
தீண்டிய இன்பம்.

மனதில் உறுதி வேண்டும்
மற்றவன் தலையை
மலைக்காமல் சீவ…

வார்த்தை தவறாமல்
கண்ணம்மாக்கள்
வருவதற்கு
முன்கூட்டியே
புரோக்கர்கள் மூலம்
பேசி வைப்போம்.

ஓடி விளையாடாமல்
பாப்பாக்களை
ஒழுங்காய்
தொலைக்காட்சிப்
பார்க்கச் சொல்வோம்…

கூடி விளையாட வேண்டாம்
அந்தக் குறத்தி மகனுடன்
சரிசமமாய் என
குழந்தையிலேயே
கிள்ளி வைப்போம்.

சிங்களத் தீவிற்கோர்
பாலம் அமைப்போம்
செலவுத் தொகையில்
அடிக்கல் நாட்டி
கட்டாத பாலத்தைக்
கணக்கில் வைப்போம்.

கங்கை நதிப்புரத்து
சப்பாத்தி கீமாவிற்கு
காவிரி
ஜர்தா பீடா
போட்டுக் கொள்வோம்.

மராட்டிய
சிங்கம் புலித் தோல்களை
சேரத்துத் தந்தங்களுடன்
சேர்த்துக் கடத்துவோம்.

தனி மனிதனுக்கு
உணவில்லையெனில்
நிற்பதுவே…
நடப்பதுவே…
பறப்பதுவே…
நீங்களும்
ஒரு நாளில்
அடுத்த வேளை
உணவாகலாம்.

யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
கண்டவன்
வாய் வைத்து
கண்றாவி
ஆன இனிது
எங்கும் காணோம்.

காக்கை குருவி
எங்கள் ஜாதி
செத்த எலியுடன்
தவசப் பிண்டம் சாப்பிட்டு
கரண்ட் கம்பிகளில்
கருகிப்போக…
கருவக் காட்டில்
கவட்டை வீச்சுகளில்
கல்லடியில் சிதறிப்போய்
செத்துப் போக…

எத்தனை கோடி முகமுடையாள்
அத்தனையும் பேடிப் பிணமுகமாய்
சிந்தனை பதினெட்டாகி
செருப்படிச் சண்டை
செப்பும் மொழிக்காய்.

விடுதலை…விடுதலை…விடுதலை…
அயோக்கியருக்கும்
அராஜகருக்கும்
ஆயுசிற்கும் விடுதலை !

அக்கிரமத்திற்கும்
அநியாயத்திற்கும்
ஆனந்தமாய் விடுதலை !
விடுதலை…விடுதலை…விடுதலை…

ய்ம்மா
பராசக்தி
பயப்படாதே…
பழகிக் கொள் !

———-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation