காற்று –வீடுகுறித்த என் ஏழாவது கவிதை

This entry is part of 53 in the series 20031127_Issue

விக்ரமாதித்யன் நம்பி


‘மரம் ஓய்வை விரும்பினாலும்
காற்று அதை சும்மா இருக்கவிடாது ‘

வீட்டிலேயே இருக்கத்தான்
விருப்பம்
வெளிவேலைகள்
விரட்டிக்கொண்டே இருக்கின்றன
எந்நாளும்

பதற்றங்கள்
சுழல்களாய்
உள்வாங்கிக் கொண்டே
இருக்கின்றன
எப்பொழுதும்

வீட்டைத் தவிர
வேறெங்கேயும்
இயல்பாய்
இருக்கமுடிவதில்லை
இன்னும்

எங்கள் வீட்டுச்சுவர்கள்
குளிர்காலத்தில்
கதகதப்பைத் தந்துகொண்டிருக்கின்றன
வெயிலிலிருந்து காப்பாற்றுகிறது மேல்தளம்
கதவுதரும் பாதுகாப்பு கடவுளைப் போலே

வீட்டுக்குள் நான் தான் பேரரசன்
என் மனைவி பெண்ணரசி
பிள்ளைகள் இளவரசர்கள்
எங்களுக்கென்ன கவலை
வெளிதான் பிரச்னை

வீடுவீடாய்
தெருத்தெருவாய்
ஊர் ஊராய்
காசு பணம் கேட்டு கேட்டு
எய்த்து இளைத்துப் போனோமே பாப்பா

வீடுபற்றி
எந்த நவீனகவிஞன்
என்ன எழுதியிருக்கிறான்
வெளியில் திரியநேர்ந்த இவன்தான்
எழுதிக்கொண்டே இருக்கிறான்

வீடென்றால் என்ன
நான்கு சுவர்களும்
நடுவில் வைத்த கதவும் ஜன்னல்களும்
நிறைய நிறைய இன்னும் நிறைய
தலையணைகள் போர்வைகள் ஜமுக்காளங்கள்
ஹாங்கரில் தொங்கும் சட்டைகள்
ஆச்சி தாத்தாவின் நீள அகலமான படங்களும்
தமிழ்க் கலைஞனெனில் புதுமைப்பித்தன் போட்டோவுமா

எது வீடு
கொஞ்சமாய்
குடித்து நினைத்துப் பார்த்தால் தெரியும்
சொந்த வீடிருப்பவன் யோசிக்கமாட்டான்
வெளியில் திரிகிறவன் பற்றிக் கொள்வான்

காசு இருப்பவனுக்கு
கவிதை வரவில்லை
ஃப்ளாட்டுகளில் வசிப்பவர்களுக்கு
நல்லதமிழ் தெரிவதில்லை
எண்ணியெண்ணிச் செலவு செய்கிறவனுக்கு எழுத்து வராது

இலக்கியமென்பது
புத்தியல்ல மனசு
மனசு என்பது
மர்மக்கடல்
ஏழுகடல்தாண்டி இருக்கிறது கவிதை

எங்கே விளக்கு எரிகிறதோ
அது வீடு
விருந்தினர்க்காக அடுப்புப் பற்றவைத்தால்
நூலகமிருந்து அதில் சங்கக் கவிதையிருந்தால்
அது வசதியான வீடு

எங்கள் பிள்ளைகள் ஸ்தாபிப்பார்கள்
இப்படி வீடுகளை
நாங்கள் இருப்பது வாடகைவீடு

பதினைந்து தேதிவரை
தவணை தந்திருக்கிறாள் வீட்டுச் சொந்தக்காரி

கவிஞனிடம்
கவிஞராகக் குடிக்கூலி கேட்கிறார்கள்
கவிஞனுக்கு
பிச்சை போடுகிறார்கள்
கவிதையை மயிர்மாதிரி மதிக்கிறார்கள்

வீடுகள் தெருக்கள் ஊர்கள்
ஆகக்கடைசியில் முடிவடைகின்றன
காட்டில் மலையில் கடலில்.

*********************************************************

Series Navigation