அன்றைக்கு அப்படியே போயிருந்தால்

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

நம்பிராஜன்


அன்றைக்கு
அப்படியே போயிருந்தால்
இன்றைக்கு
இப்படியெல்லாம் நடந்திருக்காது

இன்றைக்கு
இப்படி நேர்வதற்காகத்தானோ என்னவோ
அன்றைக்கு
அப்படியே போகமுடியாமல் போனதும்

என்றைக்கு
என்ன நிகழுமென்று
யாரால்
யூகிக்க முடியும்

இன்றைக்கு சம்பவித்ததை
நாளைக்கு எண்ணிப்பார்த்தால்
பெரிதாக ஒன்றும்
தெரியாதுதான்

விளையாட்டுப் போலக்கூட
தோன்றலாம்
வேடிக்கையாகவே
படலாம்

அப்படி செய்திருந்தால்
இப்படி செய்யாமலிருந்தால்
என்றெல்லாம் யோசிக்காமல்
இருக்கமுடியாது போல

காற்று
சமயங்களில் சூறாவளியாகிவிடுகிறதுதான்
மழை
சிலவேளைகளில் வெள்ளம் கொண்டுவருகிறதுதான்

வார்த்தை பிசகுவதும்
நடத்தை பிசகுவதும்
இசகு பிசகாவதும்
யாரைக் கேட்டுக்கொண்டு நடக்கிறது

நன்னகரப் பெருமாள்
குற்றாலீஸ்வரனானது நல்லகதைதான்.

***********************************************************

Series Navigation

நம்பிராஜன்.

நம்பிராஜன்.