தயிர் சாதம்

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

விசா



தயிர் சாதம்.

இப்படித்தான் ஆனந்தை பள்ளியில் அழைப்பார்கள். அவனுக்கு படிப்பைத்தவிர பலூன் ஊதக்கூட தெரியாது.நந்தினி கொடுத்த நோட்டு புத்தகங்களை கையில் கவனமாக ஏந்திக்கொண்டு அந்த பங்களாவின் வாசலில் நின்றான்.

அந்த தெருவின் இருபுறமும் அடர்த்தியான மரங்கள் வளர்ந்து அதன் பின்னால் பணக்கார பங்களாக்கள் மறைந்திருந்தன. நடுத்தர வாசிகள் அந்த தெருவில் நடந்தால் கூட அந்நியமாய் தெரிவார்கள். பணக்கார தெரு என்பதற்கு பப்ளிசிட்டி அவசியமில்லாமல் இருந்தது.

அந்த பங்களா வாசலில் பிரமாதமான ஒரு கேட் இருந்தது. ஆக்ரோஷமான ஒரு நாயின் படம் வரைந்து அருகில் நாய்கள் ஜாக்கிரதை என தமிழிலும் அதற்கு சரியான ஆங்கில மொழிபெயர்ப்பும் பதித்த ஒரு போர்டு நாயின் நாக்கு போலவே தொங்கிக்கொண்டிருந்தது. சுவரில் ஒட்டியிருந்த காலிங் பெல்லை அழுத்தினான் ஆனந்த். உள்ளே இருந்து குட்டையாய் ஒரு உருவம் வெளிப்பட்டது. தலை வழுக்கையாய் அடர்ந்த கருப்பில் பலூன் வயிறோடு “யென்னா?” என்றார் . அவருடைய தமிழ் கொச்சையாக இருந்தது.

“நந்தினியோட அப்பாவா இவரு. அவளுக்கும் இவருக்கு கடுகளவும் சம்மந்தம் இல்லையே. ”

“அங்கிள்” கூச்சப்பட்டான். “நோட்ஸ் கொடுக்க வந்தேன்.” அவர் மெல்ல படியில் இறங்கி கேட் அருகே வந்தார். அருகில் அவர் உருவம் மிரட்டியது. ” யென்னா நோட்ஸ்?”

“இல்ல நந்தினி கிட்ட காப்பி பண்ண வாங்கியிருந்தேன். அதான் திருப்பி கொடுக்கலாமுன்னு.”

” ஏன் இஸ்கூள்ள கொடுக்க வேண்டியது தானே. வூ ட்டுக்கு தூக்கிட்டு வந்துட்ட.”

அவன் இடமும் வலமும் ஒரு முறை முகம் திருப்பி பார்த்தான். அந்த ஏரியாவுக்கும் பங்களா வீட்டுக்கும் அந்த பாஷை பொருந்தவே இல்லை.

அவனை பறவையின் எச்சத்தை பார்ப்பது போல் பார்த்தார். உள்ளிருந்து பணக்கார நாய் ஒன்று துள்ளி ஓடி கேட் மீது கால் வைத்து நின்று வவ்….வவ்…என்று ஆர்ப்பாட்டமாய் குரைத்தது. ஆனந்திற்கு இப்போது அதிகமாய் வியர்த்தது. நாயின் பற்கள் பயமுறுத்தின. அவர் நாயை அதட்டவில்லை. இவன் கண்களில் பயத்தை ரசித்தார். அவன் வந்த சைக்கிள் காலெட்டும் தூரத்தில் தலை குனிந்து நின்றுகொண்டிருந்தது. நாயின் பற்களை மரண பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். ஓடிவிடலாமா என்று ஒரு கணம் யோசித்தான்.

“நான் ஏன் ஓட வேண்டும். அவர் டாட்டர் தான் என்ன நோட்ஸ் வீட்டுக்கு கொண்டு வந்து கொடு. மண்டே நான் சப்மிட் பண்ணணுமுன்னு கூப்பிட்டா.”

“அங்கிள்” என்றான் பசுமையாக

“நந்தினி தான் கொண்டு வந்து கொடுக்க சொன்னா?”
செயற்கையாய் பற்கள் தெரிய சிரித்தான். அவர் பதிலேதும் பேசவில்லை. இவன் டி ஷர்ட்டை உற்று பார்த்துக்கொண்டிருந்தார். அதில் “ரிமூவ் திஸ்” என்று ஆபாசமாய் எழுதியிருந்தது அவனுக்கு தர்ம சங்கடமாய் போனது.

தன் கோள்டு பிரேம் கண்ணாடியின் இருப்பை சரி செய்தவாறே
“உன் மொகரையே சரியில்லையே. வெள்ளையா ஒரு பொண்ணு வூட்டுக்கு கூப்டா உடனே வாலாட்டிகிட்டு வந்திடுவீங்களே. ”
நக்கலடித்தார். பார்வையில் வில்லத்தனம் அப்பட்டமாய் தெரிந்தது.

நாய் குரைப்பதை நிறுத்தவில்லை. ஆனந்துக்கு அவர் குரைப்பதாகவும், நாய் பேசுவதாகவும் தோன்றியது.

“என்ன சார் நெனச்சுகிட்டு இருக்கீங்க. நான் அப்படி பட்டவன் இல்ல. ஏதோ உங்க பொண்ணு வீட்டுக்கு வந்து கொடுக்க சொன்னாளேன்னு வந்தேன்.” என்று அவர் முகத்தில் அந்த நோட்டு புத்தகங்களை வீசி எறிய வேண்டும் என வெறித்தனமாய் யோசித்தான்.

எறியவில்லை .குற்றவாளியயை போல் கேட்டை பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். ஒருவழியாக கொடு என்று அவன் கையிலிருந்து அந்த புத்தகங்களை பிடுங்கினார். அவன் “அப்பாடா” என பெருமூச்சு விட்டான் . அவர் ஏதும் பேசாமல் பக்கங்களை புரட்டிக்கொண்டே உள்ளே போனார். நாய் மட்டும் இவனை பார்த்து குரைத்துக்கொண்டிருந்தது. நாயை ஒரு தெனாவட்டு பார்வை பார்த்தபடி “பாய் அங்கிள்” என சைக்கிளில் ஏறி விடுதலையானான்

“இனி மேல் இந்த பொண்ணு கிட்ட நோட்ஸ் வாங்கவே கூடாதுடா சாமி.”
என்று உறுதிமொழி எடுத்தான்.

அடுத்த நாள் வகுப்பிற்கு நந்தினி வரவில்லை. அவன் மார்புக்குள் ஏதோ உருண்டது.
“நாம போய் அவள் அப்பா எதுனாச்சும் தப்பா நெனச்சு செஞ்சுட்டாரா? நான் போயிருக்க கூடாதோ? ஒரு போன் பண்ணிட்டு போயிருக்கணுமோ?”
ஏதேதோ கேள்விகள் கேட்டான். முதல் பாட வேளையில் டீச்சர் ஏதோ ஈக்குவேஷன் டிரைவ் பண்ணிக்கொண்டிருந்தார். நந்தினியின் இருக்கை காலியாக இருந்தது.அவனுக்கு இருப்பு வரவில்லை. ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த பாடவேளை ஆசிரியர் வருவதற்க்குள் நந்தினியின் நெருங்கிய தோழி உஷாவின் இடத்துக்கு ஓடிப்போய் விசாரித்தான்.
உஷா சற்று கோபமாக கேட்டாள்.
” நீ நேத்தைக்கு அவ வீட்டுக்கு போனியா?”
“ஆமா? ”
“சரியா போச்சு. ஏன்டா….. உனக்கு எவ்வளவு தைரியம். அவ அப்பா கிட்டயே அவளுக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்க.”

” உஷா என்ன சொல்ற!!!! நான் நோட்ஸ் தான் கொடுக்க போனேன். ”
ஆச்சரியம் வானளவிற்கு எகிற அவன் முட்டை வடிவில் வாய் பிளந்தான்.

“சும்ம பிதட்டாத. பாயிஸ் பத்தி தான் தெரியுமே. நீங்க எதுக்கு நோட்ஸ் வாங்கறீங்க எதுக்கு திருப்பி கொடுக்க அலயுறீங்கன்னு.”

” உஷா டோன்ட் பீ சில்லி. நான் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்ல. நான் எந்த லெட்டரும் கொடுக்கல. என்ன ஆச்சு சொல்லு.”

“நந்தினி அப்பா ரொம்ப மோசம். நீ அவருகிட்ட யே போய் லவ் லெட்டர் கொடுத்திருக்க ரொம்ப தைரியம்.”

” கமான்….. உஷா…… என்ன ஆச்சு எனிதிங்க் சீரியஸ் ?அவ தான் வீட்டுக்கு வந்து நோட்ஸ் கொடுக்க சொன்னா. அவ அப்பா பத்தி எனக்கு தெரியாது. ”

” நோட்ஸ் தானே கொடுக்க சொன்னா. அதுக்குள்ள லெட்டர் வச்சு கொடுக்க சொல்லலயே? நந்தினி அப்பாவ பத்தி உனக்கு தெரியாதில்ல. ரொம்ப வில்லத்தனமான ஆளு. அவள எப்பவும் பாளோ பண்ணிகிட்டே இருப்பாரு. ரொம்ப சந்தேகப் படுவாரு. என்கிட்ட போன் பேசும் போது கூட ஒட்டு கேட்டிருக்காரு. அவரு பிசினஸ் விஷயமா வெளியூர் போயிருந்ததுனால தான் உன்ன வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்க சொன்னா. நீ பண்ண கூத்துல அவள ஸ்கூளுக்கே போகாதேன்னு வீட்டுல உக்கார வச்சிட்டாரு. இன்னைக்கு காலையில அவ வீட்டுக்கு போயிருந்தேன்.அவள ரூமுல போட்டு பூட்டி வச்சிட்டாங்க. அவ தம்பி தான் சொன்னான். ஏன் இந்த மாதிரி பண்றீங்க. ஒரு பொண்ணோட லைப் உங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சு இல்ல.”

“இல்ல உஷா என்ன நம்பு. நான் லவ் லெட்டரெல்லாம் கொடுக்க போகல. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் நோட்ஸ உன் கிட்ட கொடுத்து அனுப்பியிருப்பேன்.”

” ஐயோ சாமி என்கிட்டையா.” உஷா அலறினாள்.

“எதுக்கு என் அப்பா என்ன வீட்டுல உக்கார வைக்கிறதுக்கா.”

வகுப்பில் மாணவர்கள் முழுவதுமாய் கலைந்திருந்தனர். திடீரென்று இரண்டு பேர் வகுப்பறைக்குள் வர சிதறிக்கிடந்த மாணவர்களெல்லாம் கிடைத்த இடத்தில் நிரம்பிக்கொண்டார்கள்.

ஆனந்த் மட்டும் ஒற்றையாய் நிற்க எதிரில் பிரின்சிபாள்.

“கம் ஹியர்.”

ஆனந்த் மெதுவாய் நடந்து முன்னே போக அவர் அவனை எரித்துவிடுவது போல் பார்த்தார்.

அவர் அருகில் போய் நின்றது தான் தாமதம் இவன் கன்னத்தில் பளாரென ஒரு அறை பதிவாகியிருந்தது. அவன் அதை எதிர்பார்க்கவில்லை . காதுக்குள் கரன்ட் பாய்வதை போல் வலித்தது. அவன் வெடவெடத்து போய் கன்னத்தில் கை வைத்து தேய்த்தான். கன்னம் சூடாக இருந்ததை உணர முடிந்தது.. எதற்காக அறைந்தார் என யோசிப்பதற்குள் அவன் கண்கள் சிகப்பு தட்டியது. ஒரு கவரை அவனிடம் நீட்டினார். அவன் வலது கையை கன்னத்தில் இருந்து விலக்கி அதை நடுங்கிக்கொண்டே வாங்கிக்கொண்டான்.

“யு ஆர் சஸ்பண்டட் பார் ஒன் வீக். ஒரு வாரம் கழிச்சு பேரன்ட்ஸோட வா. என்ன முழிக்கிற பொண்ணோட வீட்டுக்கு நோட்ஸ் கொடுக்குற மாதிரி போய் அவ அப்பா கிட்டையே லவ் லெட்டர் கொடுக்குறியா. ராஸ்கள். உன்ன எல்லாம் போலிஸுல புடிச்சு கொடுக்கணும்.” என்று மறுபடியும் பளாரென அறைந்தார்.

வகுப்பில் எல்லோரும் ஜுரம் வந்தது போல் அமர்ந்திருந்தனர்.
“கெட் அவுட். ”
என்றபடி அவனை ஓரமாய் பார்த்துவிட்டு வெளியேறினார் பிரின்சிபாள்.

————-

நியுயார்க் நகரம். கார் 60 மைல் வேகத்தில் பெருமாள் கோயிலை நோக்கி போய் கொண்டிருந்தது…….பட்டுப்புடவையில் நந்தினி. சீட் பெல்ட்டோடு தன் ஒரு வயது மகனை மார்பில் அணைத்திருந்தாள்.

அவளுக்கு இன்று திருமண நாள்.

ஆனந்த் ஸ்டியரிங்கிலிருந்து ஒரு கையை விலக்கி அவள் கரம் பற்றினான். அவள் அவனை ஒரு காதல் பார்வை பார்த்தாள்.

“அன்னைக்கு உங்க அப்பா, நான் லவ் லெட்டர் கொடுத்ததா பொய் சொல்லி என்ன ஸ்கூள விட்டு சஸ்பெண்டு பண்ண வைக்காம இருந்திருந்தா நாம காதலிச்சிருக்கவும் மாட்டோம் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டிருக்கவும் மாட்டோம். ஹீ மேட் இட். அவரு பேருக்கும் ஒரு அர்ச்சன பண்ணிடலாம்.”என்றான் ஆனந்த். அவள் குழந்தையய் ஆழமாய் முத்தினாள்.


mailinfranki@gmail.com

Series Navigation

விசா

விசா

தயிர் சாதம்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

வேதா மஹாலக்ஷ்மி


வெள்ளையாய் பருக்கைகள்
உன் விருப்பமாய் புன்னகைக்க
அங்கங்கே மிளகாய் விதை, ஆயிரம் கண் போல
குட்டி குட்டியாய் கறுப்பு நட்சத்திரம், குதிருக்குள் புதைந்திருக்க
இரண்டறக் கலந்த போதும்,
இறுதியாய் வெண்ணை மட்டும் உதிரியாய் உறவு செய்ய,
பட்டுக்குக் கரை போல, உன் நெற்றிக்குப் பொட்டு போல,
சிவப்பு சீதனமாய் மிளகாய் தோல் மினுமினுக்க…

சுவர்க்கமே கண்டேன்! உன் முகமாய் தயிர் சாதம்!!


Series Navigation

வேதா மஹாலக்ஷ்மி

வேதா மஹாலக்ஷ்மி