கவிதைகள்

This entry is part of 59 in the series 20031106_Issue

மாலதி


சுக்கல் சுக்கலாய் என் சிதிலங்கள்
என் பெயரால்.
தீவிரவாதம் என் உணர்வில்.
ஒளிந்து வாழ விதியும்
பேரொளி எழுப்ப மனமும்
ஒன்றோடொன்று போராடி
எப்போதைக்கும்.
வெடிமருந்துகளை கிட்டிக்கிறேன்
அழுந்த அழுந்த கிட்டங்கியில்.
வாழ்நாளில் வெடிக்கவிட
மாட்டேன்.
தற்கொலைப்படையாகவும்
மாட்டேன்.
நட்பில்லாத பெருங்காட்டில்
புதைத்துப் போகிறேன்
இருட்டுகளுக்காகும்
வெளிச்சத்தை
உங்கள் யாருக்கும் நான்
சொந்தமில்லை
துறந்து விடுங்களென்னை
ஈரமின்றி.கொள்ளை போனவீட்டுச்சொந்தக்காரன்
போலீசுக்கு
ஒப்புவிக்கும் பட்டியல்
எலும்புகளைச் சேகரிக்க மயானத்தில்
உட்கார்ந்த மகன்
காணாமல் போன மகளின்புத்தகக்கட்டில்
தடயம் தேடுகிறபெற்றோர்
தவறின காதலின் ஈமெயில் ஐடியை
வெறிக்கும் தருணங்கள்
போல்கின்றேன்
முதல் சுற்றில் வேகாத கவிதைகளை
இரண்டாம் கட்டத்துக்குத் தேற்றும்
அவசியங்களில்.இரவுப்படுக்கையில்
என்னைப்புரட்டிப்போடுகின்ற
துக்கங்கள்
அநேக முதல் நாட்களாலானவை.
அழிந்த ஆதிகள்.
கிழிபட்டுக்குதறப்
பட்ட முடிவுகளை
ஆரம்பத்திலேயே
வைத்திருந்தவை.
புரளும்போதெல்லாம்
ஒரு கனவைத் தேடுவேன்
கண்மூடி.
குளிர்மடி கிடைக்கும் வரை
விரல் குவிந்து
மயானத்தைச்
சூட்டும்வரை.
கடைசிக்கான ஆயத்தங்களின்
நபரோடு.

___
malti74@yahoo.com

Series Navigation