காதல்கள்…

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எப்போதும் எனக்குள்ளே
ஏதேனும் ஒருகாதல்
தப்பாமல் பிறப்பதினால்
தயங்காமல் எழுதுகின்றேன்

பருவத்தின் சாரலிலே
பரிதவித்த நாட்கள் முதல்
சருமத்தின் தேமலென
சருகான காதல்கள்!

பார்த்த சினிமாவும்
படித்தறிந்த சஞ்சிகையும்
போதித்ததெல்லாமே
பொய்க்கதை காதல்கள்!

பள்ளி நாட்களிலே
பக்கத்திற் பெண்ணிருந்தால்
படபடத்து உடல்வேர்த்து
பயமுறுத்தும் காதல்கள்!

கல்லூரி நுழைந்தவுடன்
காலரைத் தூக்கிவிட்டு
கன்னியரைச் சுற்றிவந்து
கனாக் கண்ட காதல்கள்!

மார்கழி பனிப்பூவில்
மாருரசும் குளிர்காற்றில்
வரப்புகளில் வலம்வந்த
வாடாத காதல்கள்

கிராமத்துக் குளக்ரையில்
கிளைதாழ்ந்த வேப்பமரம்
தணியாத மொழிக்காதல்
தமிழ்க்காதல் பிறந்தவிடம்!

மழைச்சாரல் முற்றத்தில்
மணக்கின்ற வடைகளுடன்
கம்பன் தமிழ் சுவைத்ததுண்டு
காதலித்து வேர்த்ததுண்டு

அஞ்சுகின்ற வஞ்சி முகம்
அடிவான தொலைத் திரையில்
அந்திவரை காத்திருந்து
அடிமையென நின்றதுண்டு!

மாலையிட்ட தேதிமுதல்
மனையாளைக் காதலித்து
வாழ்வுற்றேன் வளங்கண்டேன்
வானொத்த காதலுக்கு!

வாழ்க்கையைக் காதலித்தேன்
வளத்தை உணர்ந்ததினால்
தாழ்ப்பாளைப் போட்டுவிட்டேன்
தடம் புரளும் காதலுக்கு!

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா