சிவகாசி சித்திரங்கள்

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

ராமலக்ஷ்மி


சிவகாசி சீமையிலிருந்து
சிறப்பான செய்தி ஒன்று!
சித்திரங்கள் தீட்ட வேண்டிய
சின்னஞ்சிறு கைகள்
சிதறி வெடிக்கும் மருந்துகளை
செய்து வந்த அவலங்கள்
முடிவுக்கு வந்ததென்று
முத்தாய்ப்பாய் செய்தியொன்று-அம்
முத்துக்களின்
முன்னேற்றத்துக்கு
முகவுரையாய் வந்ததின்று!

மத்தாப்பாய் மலர வேண்டிய
மழலை மொட்டுக்கள்
மத்தாப்புத் தயாரிப்பில்
மகிழ்ச்சிகளைத் தொலைத்த
மாசு-இன்று
நல்ல மனங்களால்
தூசு தட்டப் பட்டு
துலங்குவது
குதூகலமே.

கற்றிருந்தால்
கல்பனா சாவ்லா போல்
விண்வெளியை ஆராயும்
வித்தகர்களாய்
விளைந்திருக்கக் கூடிய
வித்துகள்!

கல்வி என்பதே
கானல் கனவாகிப் போனதால்
வான்வெளியில்
வாண வேடிக்கைக்கு வெடிகள்
வார்ப்பதிலே-
வாய்ப்புக்களையும்
வாழ்வின்
வசந்தங்களையும்-தாரை
வார்த்து விட்ட
குருத்துகள்!

இல்லாமையால்
‘இளமையில் கல் ‘வியை
இழக்க நேர்ந்த
இளம் தளிர்கள்!

பக்குவம் இல்லாத
பழைய தலைமுறை
பணத்துக்காகப்
பச்சிளம் பாலகரைப்
பட்டாசுச் சாலையிலே
பயன் படுத்தியது
பாவம் என்று-
படித்துத் தேர்ந்த
புதிய தலைமுறை
புரிந்து கொண்டது
புண்ணியமே!

எழுபது ஆண்டுகளாய்
இத் தொழிலிலே
ஈட்டிய பணம் யாவும்
எத்தனை
எளிய பிஞ்சுகளின்
எதிர்காலத்தை
ஏய்த்துப் பிரட்டியது என்பதை
எண்ணி உணர்ந்த-இன்றைய
எஜமானர் வர்க்கம்
ஏற்றமிகு சமுதாயம் கண்டிட
ஏக மனதாய் பாடுபடுவது
போற்றுதலுக்குரியதே!

அரசு
அரட்டியதால் மட்டுமின்றி
மனசும்
வாட்டியதால் வந்தது
இந்த மாற்றமே!
உலகம்
தூற்றியதால் மட்டுமின்றி
உறங்கிக் கிடந்த
மனசாட்சி
விழித்துக் கொண்டதால்
விளைந்தது
இந்த ஏற்றமே!

ஆட்சியாளரே தருகிறார்
சாட்சி இன்று:
தன்னிறைவு நோக்கித்
தடம் புரளாமல்
பயணிக்கிறது சிவகாசி-
பருவத்தே பயின்றிட
பாடசாலைகளும்,
கருத்துடன் கற்றிட
கல்லூரிகளும்,
தொழிலிலே தேர்ந்திட
பயிற்சி கூடங்களுமாய்
பல்கிப் பெருகி…
பெருமை சேர்கிறது.

வேலை வாய்ப்புக்கும்
குறைவேது ?
விதவிதமாய்
வெடிவெடித்து
வேடிக்கையாய்
கேளிக்கைகளைக்
கொண்டாடிட-
உலகமே இருக்கிறது
இவர் ஒருவரையே
எதிர் பார்த்து…
வாழ்வும் வளமாகிறது.

இப்போது
உழைப்புக்கு ஊதியங்களும்
லாபமாய் லகரங்களும்
உறுத்தல்கள் ஏதுமின்றி
உண்மையின் பாதையிலே!
வெறுப்புக்கு இடம் கொடாமல்
வெற்றியினை நோக்கி
வேக நடை போடுவது-இரண்டு
வர்க்கங்களுமே!

ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி