தேடுகிறேன்…

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

பொன்னி வளவன்


பொறியியல் படித்து
அமெரிக்கா வந்து
வருடங்கள் பத்து
உருண்டோடி விட்டன!

இரண்டு வருடங்களுக்கொருமுறை
இந்தியா என்ற அட்டவணைப்படி
இன்று நான் என் கிராமத்தில்.

பத்து வருடங்களில்
எப்படியெல்லாம் மாறிவிட்டது
என் கிராமம்!

O

மாட்டு வண்டி பூட்டி
மன்னார்குடி டவுன் சென்ற
மக்கள்
போகிறார்கள் இன்று
புழுதி பறக்கச் செல்லும்
சிறு பேருந்தில்!

O

கிட்டி, கிளி கோடு பாய்தல்
விளையாட்டுகள் மறந்து
கிரிக்கெட் விளையாடும்
சிறார்கள்!

பாவாடை, தாவணி மறந்து
சுடிதாரில் உலா வரும்
பள்ளிக்கூட மாணவிகள்!

O

காளைகளை ஏரில் பூட்டி
கலப்பயை கையில் பிடித்து
ஏர் உழும் காட்சிகள் இல்லை.
டிராக்டர் வைத்து
உழும் விவசாயிகள்!

முப்பது அடி கிணறு வெட்டி
முகத்தடியில் மாடுகள் பூட்டி
தண்ணீர் இறைக்கும்
காட்சிகள் இல்லை.
முன்னூறு அடி
ஆழ்குழாய் கிணறு தோண்டி
மோட்டார் வைத்து
தண்ணீர் இறைக்கும் முறை!

நெற்கதிர்களை லாவகமாக
கையில் தூக்கி, கல்லில் அடித்து
கதிர் அடிக்கும் காட்சிகள் இல்லை.
இதற்கும் வந்து விட்டது
இயந்திரம்!

O

கோவில் திருவிழாக்களில்
அரிச்சந்திரா, பவளக்கொடி
வள்ளித் திருமணம்
நாடகங்கள் இல்லை.
திரை கட்டிக் காட்டப்படும்
சினிமாக்கள்!

கரகாட்டாம், மயிலாட்டம்
குறவன் குறத்தி ஆட்டங்கள் இல்லை.
கோடம்பாக்கம் குமரிகள்
ஆடும் கும்மாள ஆட்டங்கள்!

O

முச்சந்தியில் கூடி
பேசி, பாடி, சிரித்து
மகிழ்ந்த மக்கள் இன்று
மூலைக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்
தொலைக்காட்சி பெட்டி முன்பு!

காலச் சக்கரம், விஞ்ஞான வளர்ச்சி
ஏற்ப்படுத்திய மாற்றங்கள்!
நான் மட்டும் தேடுகிறேன்…
நான் ஓடி விளையான்ட
என் கிராமத்தை….. ?!

###

Ravichandran_Somu@yahoo.com

Series Navigation

பொன்னி வளவன்

பொன்னி வளவன்