தாய்மைக் கவிதை

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

கரு.திருவரசு


மனைவி, என்றன் மனைக்கு விளக்கவள்!
துணைவி, ஏனெனின் உயிர்க்குத் துணையவள்!
இல்லாள், அன்புடன் இல்லம் ஆள்பவள்
இல்லா விடிலென் இல்லத் தொன்றிலை!

கற்பனைப் பெண்ணொடு கலந்து சலித்ததும்
அற்பனாய் மாறி அலுத்து வருங்கால்
உடலை அணைத்துள் மனத்தைத் துடைத்து
மடமை அழிக்கும் மாச்சுடர் ஆவாள்!

வெற்று மனிதனாய் வீட்டில் புகுந்தால்
பற்றும் கைகளால், பேசும் மொழிகளால்
வெட்டும் மோன முறுவல் மின்னலால்
கொட்டும் வலிமைக் கூழாய் ஆவாள்!
சிட்டாய்ப் பறப்பாள், சேயாய் அலைப்பாள்,
பட்டாய் நழுவிப் பழமாய் விழுவாள்!
கையாய் உதவும் கன்னி என்னுயிர்
மெய்யாய் விளங்கினாள்! மேனி மலாில்
தொய்வு! பின்,சுமை! சோர்வு! தளர்வு!
பையப் பையவே பதுமை நடந்தாள்!

அன்பா என்றெனை அழைத்த உயிர்க்குள்
அப்பா என்றிடும் அழகுயிர் வளர்த்தாள்!
வேதனை, குழந்தை வேண்டியே இன்ப
வேதனை உற்றாள், வெறுப்பும் கூட!

மலாிற் பிறந்த மலர்போல் சின்னக்
கிழவன் பிறந்தான்! கிழவி மகிழ்ந்தாள்!
என்னை வைத்தே எழுதிய உருப்போல்
மன்னன் இருந்தான், மகிழ்வில் விழுந்தேன்!

உருண்டான்! எழுந்தான்! உளறி மழலை
விருந்து தந்தான்! விளங்கவும் பேசினான்!
ஒருநாள் அன்னை ஒளிமுகம் திருப்பி
ஒருவினாத் தொடுத்தான்! உாியாள் அதற்கு
மறுமொழி தந்த அருமையை இங்கே
தருகிறேன்! அஃதோர் தாய்மைக் கவிதை!

சேய் –
என்னம்மா! கண்ணம்மா!
எனையெங்கே கண்டாய் ?
முன்னம்நான் எங்கிருந்தேன் ?
மொழிவாயா கொஞ்சம்!

தாய் –
என்மகனே உன்கேள்வி
ஈடற்ற தய்யா!
பொன்மகனே உலகத்துப்
புதுமனிதா சொல்வேன்!

உள்ளத்தில் அழகுருவாய்
ஒளிந்நிருந்தாய்! தெய்வ
இல்லத்தில் இறையுருவாய்
நீயிருந்தாய்! அஃதைத்

தொழுங்காலை நினையுந்தான்
தொழுதேன்நான்! அங்கே
எழுந்தபல கோாிக்கை
அனைத்துள்ளும் நீயிருந்தாய்!

என்னுடைய ஆசைகளில்
என்னுயிாில் இருந்தாய்!
என்னன்னை உயிாிலும்நீ
இருந்தாயே கண்ணே!

நம்குடும்பம் காக்கின்ற
ஞானத்தாய் மடியில்
நம்குடும்ப ஒளியான
நல்லாற்றல் மடியில்

தலைமுறைகள் பலவாய்நீ
தாலாட்டப் பட்டாய்!
தலைமுறைகள் பலவாய்நீ
பாலூட்டப் பட்டாய்!

துறக்கத்தின் மூலமுதற்
சொத்தும்நீ! காலை
பிறக்கின்ற அருணனுடன்
பிறந்தவன்நீ! ஞால

உயிரோடைப் பனிநீாில்
மலர்போல ஊர்ந்தென்
உயிரான உளமான
கரைசேர்ந்து விட்டாய்!

குறிப்பு:
இக் கவிதையின் பிற்பகுதியாக வரும் ‘சேயின் வினாவும் தாயின் விடையும் ‘
உலகக்கவி இரவீந்திரநாத் தாகூர் கருத்துகளின் கவியுரு.

thiruv@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு