பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


பட்டு நூல்களைத் தொட்டு -உணர்வு
இட்டு கற்பனைக் கோர்த்து -சிறகு
ஒட்டும் வண்னத்துப் பூச்சி -அழகு
இட்டு படைத்தவனங்கே!
‘இட்ட சேலைகள் காட்டி – எங்கள்
இதயம் பூத்திட வைத்தீர் ‘ எனப்
பட்டமும் பெருமையும் பெற்று – நல்ல
துட்டு சேர்ப்பவரிங்கே!

வாட்டும் நெருப்பினில் வெந்து -நல்ல
வாய்க்கினிய கறிகள் செய்து -சுகம்
ஊட்டும் சுவைபல சேர்த்து -நள
விருந்து சமைப்பவனங்கே!
கோட்டும் சூட்டுமாய் வந்து -நன்கு
கேட்டு வாங்கி மிக வுண்டு- ஏப்பம்
மீட்டு மிடைவெளியிற் சற்றே – விருந்து
வீட்டைப் புகழ்பவரிங்கே!

பாட்டு தந்தவ னொருவன் – வண்ணப்
படம் பிடிப்பவ னொருவன் – மெருகு
ஊட்டும் திரைக்கதைக் கொருவன் -எனக்
கூட்டு முயற்சிகளங்கே!
சாட்டை சொடுக்கு மழகும் – நடிகன்
சண்டை போடு மழகும் – கண்டு
கூட்டம் புரளுதிங்கே! – அவனைக்
கும்பிட உருளுதிங்கே!

தஞ்சைப் பெரிய கோவில் – அழகு
தாஜ்மகா லொத்த சான்றும் – எழ
நெஞ்சைப் பிளந்தவர் கோடி -அவர்
நினவில் நிற்பதில்லை கிளியே!
உழைக்க மட்டும் தெரிந்தால் – உன்னை
ஒதுக்கி மிதித்துப் பிறருயர்வார்.
பிழைக்கத் தெரியவேணும் கிளியே – நன்கு
பேசத் தெரிய வேணும்!

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா