நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

ராமலக்ஷ்மி


கற்பதற்குக் கல்வி என்ற
காலம் எங்கு போனது ?
விற்பதற்கே கல்வி என்ற
கோலம் இன்று ஆனது!

புற்றீசல் போலத்
தொழில் கல்விக் கூடங்கள்!
பெற்றவரின் ஆயுட்காலச்
சேமிப்பைக் குறி வைத்து…
கல்லூரிக்கும் விளம்பரங்கள்!

கூறு போட்டுக் கூவி
விற்கிறார்கள்-என
எண்ண வைக்கும் அவலங்கள்!

மாணவ மணிகள்
கை நிறைய அள்ளி வரும்
மதிப்பெண்களுக்கு
இல்லை ஏதும் மதிப்பு!

பெற்றவர்கள்
கை இடுக்கில் கொண்டு வரும்
பெருந்தொகைக்கே
வரவேற்பு!

நுழைவுக் கட்டணத்துக்குத்
தலையை அடகு வை,
கேட்ட பாடம் கிடைக்க
உன்னையே அடகு வை!

கொட்டிக் கொடுப்பது
கொடுமையே எனினும்
தட்டிக் கேட்க வழியின்றித்
தவிப்பரின் தவறா ?

தருவதற்குத் தயாரெனும் போது
தட்டி பறித்திட பெரிதாகத்
தயங்குவானேன்-என
எண்ணுபவரின் தவறா ?

கொற்றவனே இதற்குத்
துணை எனும் போது
குற்றம்தான் யார் மீதும்
சுமற்ற வழி ஏது ?

எங்கு போகிறது
நம் நாடு ?
எப்போது பிறக்கும்
இதற்கொரு தீர்வு ?

அடிப்படை அறிவைக் கோருவது
குடிமக்களின் குன்றாத உரிமை!
அதைத் தடையின்றி வழங்குவது
அரசின் தலையாயக் கடமை!

இலவசமாக வேண்டாமே,
இனாமாகவும் வேண்டாமே!
கனாக் காணும் மாணவரின்
கனவு கலைந்திடவும் வேண்டாமே!

நீதித் தேவதையே
நீ சற்று வருவாயா ?
நியாய நிதியிலே
கல்வி தரச் சொல்வாயா ?
***
ramalakshmi_rajan@yahoo.co.in
ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி