உறைவிடம்

This entry is part of 57 in the series 20030717_Issue

வை. ஈ. மணி


பிற்பகலில் நித்திரையில் பிறந்த எனது கனவில்
கற்பனைக்கும் எட்டாத காட்சி ஒன்று கண்டேன்
அற்புதமாய் ஒளித்ததொரு அரிய ஜோதி வானில்
சொற்களில்லை வார்த்தைகளில் சொக்கும் அழகைக் கூற (1)

கண்விழித்துப் பார்க்கையிலே கனவில் கண்ட உருவம்
விண்வெளியில் மாயமென விரைவில் மறைந்து செல்ல
எண்ணிலாத ஐஐயங்கள் எழுந்து உறுத்த இறைவன்
திண்ணமாக இருக்குமிடம் தெரிய ஆவல் கொண்டேன் (2)

உருவத்தில் மிகப்பெரிய உருவம் என்றார் மீண்டும்
உருவத்தில் மிகச்சிறிதிற் குவமை கூறி மனதில்
அறிவிற்கு முரண்பட்ட ஆழ்ந்த கருத்தை எழுப்ப
புறவேற்றிற் குள்ளிருக்கும் பொருளைக் காண முயன்றேன் (3)

கதிரவனே கண்கட்குக் காணும் எனினும் கோடி
கதிரவங்கட் கிணையாகும் கடவுள் காண்ப தில்லை
மதியினாலே விடைகாண முயன்று தோல்வி யுற்று
கதியிலாது இறைவனின் கருணை கோரி நொந்த (4)

உள்ளத்தின் துயர்நீக்க உறுதி கொண்டு மனதின்
உள்நோக்கிப் பார்வையினை ஊன்றி மேலும் அதனை
எள்ளளவும் அசையாது இருத்த அங்கு ஈசன்
நள்ளிருளில் தீபமென நிலவி நிற்கக் கண்டேன் (5)

ntcmama@pathcom.com

Series Navigation