சொல் தேடி பயணம்…

This entry is part of 32 in the series 20030710_Issue

ராம்பால்


நடைமுறைச் சிக்கலில்
சதாய் உழன்று
எதேச்சையாக வந்தமரும்
அழுக்கை…

ஒரவிழிப்பார்வையில்
தெரித்து விழும்
எண்ணற்ற கனவுகளை..
பிறிதொரு நாள்
அது தரும் கண்ணீரை..

அவ்வப்பொழுது நியாபகத்திற்கு
வந்து போகும் அம்மாவை..
கில்லி விளையாண்ட பால்யத்தை..
சைக்கிள் கற்க
விழுந்து எழுந்த மைதானத்தை..
கண்ணை உறுத்தும்
என் தேச அவலங்களை..
பிரிந்து வந்த கிராமத்தை…
மறந்து போன நண்பனை…
முதுகில் குத்திய
துரோகியை..

வானக் கண்ணாடி பார்க்க
வந்து போகும்
நிலவை, நட்சத்திரங்களை..
அகக்கண்ணாடி கொண்டு பார்க்கும்
சுயத்தை, மனதை..

எங்கோ இருந்து ஒலிக்கும்
அதிகாலை நேரத்து கீதத்தை..
மார்கழி நேரத்தில்
வண்ணப்பாவாடை அணிந்திருக்கும்
என் தெருவை..

இவைகள் இல்லா கவிதை
எழுத விழைகிறேன்..
மந்திரமாய் ஒலிக்க வைக்கும்
அந்த ஒரு சொல் தேடி…

rambal@operamail.com

Series Navigation