பணமே உன் விலை என்ன ?

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

புதியமாதவி


பணமே-
உன்னைப் படைத்தவனுக்கே
ஏன்
பாதகம் செய்தாய் ?

உன்னை விதைத்தவனுக்கே
ஏன்
வினை விதைத்தாய் ?

விலை
நிர்ணயிக்கத்தான்
உன்னை விதைத்தோம்
நீ ஏன்
விளை நிலத்திற்கே
விலை பேசினாய் ?

டாலருக்கு சிரிப்பாய்
ரூபாய் என்றால் அழுவாய்
உனக்கும் கூட
அந்நிய மோகம்தான்..!

கடைசிவரை
கணக்கு எழுதுவதால்
உனக்கென்ன
கடவுள் என்ற நினைப்பா ?
அடப் போடா..போ..!

வங்கி கணக்கில்
உன் வட்டி இல்லாதபோது
வாழ்க்கை-
வாழ்ந்து கொண்டிருந்தது
வாழ்க்கைப் புத்தகத்தில்
நீ கையொப்பமிட்டப் பிறகுதான்
வாழ்க்கை
வாழாவெட்டி ஆனது,!

பணமே..
உனக்காக
ஓடியபோது
வாழ்க்கை வண்டி
ஓடிக்கொண்டிருந்தது.
நீ-
ஏறி அமர்ந்தபிறகுதான்
ஏனோ தடம் புரண்டது.

பணமே..
ஓடிக் களைத்துவிட்டேன்
உண்மையைச் சொல்
உன் வெற்றுக் காகிதத்தில்
எழுதப் பட்டிருப்பது
வெறும் எண்கள்தானே ?

***

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை