இரண்டு கவிதைகள்

This entry is part of 45 in the series 20030703_Issue

ராமலக்ஷ்மி.


எல்லார்க்கும் இனியவராய்……

மண்ணிலே பிறந்திட்ட மனிதர்களே! இதில்
ஒரு பிடியும் நமக்குச் சொந்தமில்லை.
விண்ணுலகம் செல்லுகையில் நாம் வாரிக்
கொண்டு போவது எதுவுமில்லை!
தண்ணீரில் எழுதுகின்ற எழுத்தன்றோ இத்
தரையினிலே நாம் வாழும் நல்வாழ்வு.
கண்ணிலே எண்ணெய் விட்டுக் காத்ததெல்லாம்
கரையேரும் நாளினிலே கூட வருமோ ?
எண்ணி எண்ணிக் கொடுத்திடுவோம்
எண்ணியே வாழ்ந்திடுவோம்; அதையே
என்னாளும் எண்ணிப் புழுங்டுவோம்-ஆபத்திலும்
அடுத்தவனுக்குத் தரும் எண்ணம் இருப்பதில்லை!
எண்ணுகின்ற கத்தைகளிலே ஓர்
எள்ளளவும் நம்மோடு நிச்சயமாய்
பின்னாளில் வாராது என்பதனை
பின்னும் ஏனோ நாம் உணர்வதில்லை!
நேசமானவரும் மிகப் பாசமானவரும்
மோசமானவரும் பார்த்தே யிராதவருமாய்
எத்தனையோ பேரினை-எமன்
நித்தம் சொடக்கிடும் நேரத்துள்
சொர்க்கமோ நரகமோ சுருட்டிக்
கொண்டு போகிறான்; விரட்டி
வரும் காலனின் சுருக்கு விழும்
நேரமோ எவருக்கும் நிச்சயமில்லை!
அத்தனையும் தெரிந்திருந்தும்
அடுத்தவரை மதிப்பதில்லை
அன்பை நாம் கொடுப்பதில்லை
கடமை நாம் செய்வதில்லை-கூட
வாராத சொத்துக்கு வாழ்நாளெல்லாம்
பித்தராய் சண்டையிட்டுத்
தீராத பிரச்சனை செய்து-உற்றாரை
வீட்டுக்கே வாராதிருக்கச் செய்கின்றோம்.
வேதங்கள் வாசிக்கின்றோம் ஆனால்
வேறு விதமாய் நடக்கின்றோம்.
கீதைதனைப் படிக்கின்றோம்;
ஆயினும் கீழ்த்தரமாய் நடக்கின்றோம்!
குர்ரான் ஓதுகின்றோம்;நற்
குண நலன்கள் கொண்டிரோம்!
ஏனிந்த முரண்பாடு-அன்பரே
என்று நாம் திருந்திடுவோம் ?
புதியவராய் மாறீடுவோம்
புனர் ஜென்மம் எடுத்திடுவோம்
கண்ணியமாய் நடந்திடுவோம்
புண்ணியங்கள் சேர்த்திடுவோம்!
இப்பூவுலகில் வாழ்ந்திருக்கப்
போகின்ற சொற்பநாளில்
எல்லார்க்கும் இனியவராய்
இருந்து விட்டுப் போவோமே!
===========================
– ‘நண்பர் வட்டம் ‘ மே 1989 இதழில் வெளியான
கவிதை.


‘மெகா முதலைகள் ‘

தொலைக்காட்சித் தொடர்களிலே
தொலைந்து போகும் மணித்துளிகள்!
தொடருகின்ற இப்பேரவலம் கண்டு
திறந்திடுவோமா கண்கள்தனை ?
அரை மணிதான் அரை மணிதான்-என
அடுத்தடுத்துப் பார்க்கையிலே
நித்தம் நித்தம் செலவாவது
எத்தனை அரை மணிகள் ?
கூட்டிதான் பாருங்களேன்
வெட்டியாக வீணாகும்-தங்கக்
கட்டியான மணித் துளிகள்
ஆண்டொன்றுக்கு எத்தனை என ?
பொன்னான நம் காலம்
பொசுங்கிப் போவது புரிந்திடுவோம்!
வீணாகிப் போகாமல்
விழித்திடுவோம் விரைவாக!
‘ரிலாக்ஸ் ‘ செய்ய-காண்பது போய்
தொடர் பார்ப்பதே தொழிலாகி,
அன்றாட வேலைகள்தான் ‘ரிலாக்ஸ் ‘
என ஆகலாமா ?
கவலை மறக்கக் காட்சித் தொடர்
என்பது போய்
கதா பாத்திரங்களுக்காகக்
கவலைப் படுவது முறைதானா ?
சாபமிடும் சத்தங்களும்
ஓலமிடும் ஒலிகளும்-நாம்
வாழுகின்ற இல்லங்களில்
ஒலிப்பதும் நல்லதல்ல!
மெல்ல மெல்ல நமை விழுங்கும்
மெகாத் தொடர் முதலைகளிடம்
முழுதாக பலியாகும் முன்
வெல்வதற்கு வழியாது ?
தேர்ந்தெடுத்துப் பார்க்கையிலே
தேங்கி நிற்கும் பல வேலைகளைத்
தேனீ போல முடித்திடத்தான்
தேவையான நேரம் கிடைத்திடுமே!
மேலும் சேருகின்ற நேரத்தில்
நல்ல இசை கேட்டிடலாம்,
புத்தகங்களைத் துணையாக்கிப்
புத்துணர்ச்சி பெற்றிடலாம்!
முத்தான மணித்துளிகளைக்
கொத்தாகக் கையில் ஏந்தி
சத்தான எதிர் காலத்துக்கு
வித்திடுவோம் விரைவாக!

***
*ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation