சிறையா, தண்டனையா ? ?

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

வேதா


ஒரு பக்கம் ஓங்கிவளர்ந்த குன்று!
ஒடுக்கி இடுக்கில் ஒரு குடிசை,
குடிசை முன்னே ஒரு கிளி….

‘கீச் கீச் ‘ சொல்லியே, கிளிக்கு
கீழ்வானம்வரை நட்புவட்டம்…
கிளிக்குத் தெரியாத
கிளைகளும் உண்டோ ?

கீழே ஓடை,
ஓடி ஓடித் தீராத காலமாய்!
குட்டிகுட்டியாய் குன்றுகள்,
பாசம் படர்ந்து பதிந்திருந்த நினைவுகளாய்!

அழகிய தென்றல்,
இன்பமான இயற்கை,
இரவும் பகலும் கிறங்க வைக்கும்
இனிய ஸ்பரிசமாய்,
சின்னச் சின்ன மொட்டுக்கள்…

முட்டித் திறக்க
முயற்சியோடிருக்கும் முனைப்பில்
பொல்லாத வண்டுகள்…

எதிரே ஏகாந்தமாய்
பெரியதொரு ஆலமரம்,
என்ன இடிமழையிலும்
எதற்கும் கலங்காத மனம்போல்….

விரிந்து பரந்த வானம்
விரியத் துடிக்கும் இயற்கையாய்,
வெண்பஞ்சு மேகம்!

ஒவ்வொரு மாலையும்
ஒய்யாரமாய் சரியும் சூரியன்,
சிவந்துகிடக்கும் நெற்றிப்பொட்டாய்….

உடனே எழும் நிலா,
வெளிளைப் பிள்ளை மனதாய்!
சண்டை போட்டிருந்தால் – தேய்ந்து
சாதுவாய் இருக்கும்!
அன்பைச் சுமந்திருந்தால்
பிறையாய் பிதற்றி நிற்கும்!
எல்லாம் தீர்ந்திருந்தால் – பூர்ணமாகி
ஏகாந்தமாய் மயக்கும்!
அன்புக் கதிர்கள் பட்டால்
அமாவாசையாய்,
அவனுடன்
கரைந்து போயிருக்கும்!

என்ன செய்ய ?
எல்லாம் தான் தெரிந்திருந்தும்,
சண்டை போடவோ,
சமாதானம் செய்யவோ,
மோகத்தில் காயவோ, தன்
சோகத்தை மாய்க்கவோ,
மலரோடு கன்னம் உரசவோ,
மயங்கி மடியில் சாயவோ,
சேர்ந்து தேடிப் பறக்கவோ,
எதற்குமே இயலாத சாட்சியாய்,

ஒரு பக்கம் ஓங்கிவளர்ந்த குன்று!
ஒடுக்கி இடுக்கில் ஒரு குடிசை,
குடிசை முன்னே ஒரு கூண்டு….

சிறையா ? தண்டனையா ?
கூண்டுக்குள் ஒரு கிளி, தன்
இறந்துபோன இறக்கைகளுடனே….

piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா