பழைய கோப்பை, புதிய கள்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

அனந்த்


மரபுப்பா என்றதும் மக்கள் மனத்தில் மறைந்தபழம்
பிரபுக்கள் மன்னர் பெரும்பெரும் செல்வர்கள் பேரிலன்று
கரடியாய்க் கத்தித்தம் கும்பியைக் காத்த கவிஞரெல்லாம்
பரப்பிய பல்லுடைப் பாநடை வந்து பயம்தருமே (1)

பயமினி வேண்டாம் பலப்பல காலமாய்ப் பஞ்சடைந்து
நயமெலாம் போன நடைகளைப் போக்குவோம் நாட்டினர்தம்
வயம்நமைச் சேர்த்தவர் வாழ்வினில் காணும் மரபைமக்கள்
வியப்புறும் வண்ணம் விளக்கிடும் பாக்களை விண்டுரைத்தே (2)

உரைத்திடு வோம்அவ் உழவனின் உப்பில்லா உண்டியினை
விரைந்து பறந்துகை வண்டி யிழுப்பவன் வேர்வையினை,
தரையில் படுப்பவன் சம்மட்டி ஏந்தும் சளைப்பதனை,
கரைந்தவர் வாழ்வைக் கழித்திடும் போக்கைக் களைவதற்கே (3)

களைத்துச் சலித்துத்தாம் கண்டதெல் லாம்பல காசுகளாய்
விளைத்துத் தருபவர் வேதனை யாலுயிர் விட்டிடலும்
திளைத்துத் திரிபவர் தேனொடு பாலையும் தேடுதலும்
முளைத்துக் கிளைத்திட்ட மோசங்கள் என்றினி மேலுணர்வோம் (4)

மேலிது கீழென மெத்தச் சுயநலம் மேலிடமுன்
ஓலையில் கண்ட(து) ஒதுக்கி இனியிங்கே உண்மையொடு
வேலை புரிபவர் மேல்பிறர் கீழென்ற மெய்யுணர்வோம்
பாலை மறைந்து பசுமை கொழித்திடப் பாரினிலே (5)

பார்க்கும் பொருட்களில் பாமணம் வீசிடும் பாங்குணர்ந்தே
ஆர்க்கும் அழகை அனுபவித் தாலாதன் ஆக்கத்தினால்
யார்க்குமே வந்திடும் எவ்வகைத் தானதோர் யாப்பினிலும்
சேர்க்கும் கவிதைத் திறமது செப்புவேன் திண்ணமிதே (6)

திண்ணையின் பக்கம் செழித்து வளர்ந்திட்ட செண்பகத்தின்
நுண்ணிய நாற்றம் நுகர்வது போல நுடங்கிநம்முள்
எண்ணரும் பூக்களாய் என்றும் அசைந்திடும் எண்ணமெலாம்
பண்ணெனும் வாசம் பரப்பிடும் பாங்கு புரிந்திடுமே (7)

புரிந்த மறுகணம் பொற்கவி வண்ணத்தில் பொங்கியவை
தெரிந்துநம் கைவழி தேனமுதாகத் தெறித்திடும்,ஓ!
அரிய புதுமை அதுதரும் ஆனந்தம் ஆரிடம்நாம்
பரிந்து விளக்கிடப் போகும் ? அதுவே பரவசமே! (8)

வசம்வரும் பாடல் வளத்தினால் மாபெரும் வையகத்தில்
அசைந்திடும் ஒவ்வோர் அணுவும்; அதன்விளை வாகநமக்(கு)
இசைந்திடும் பாருள இன்பங்கள் யாவும்; இதற்குமனக்
கசிவன்றி எந்தக் கவிவகை ஆகிடும் காரணமே ? (9)

ஆகநான் இங்கே அளித்த கருத்துகள் யாவும்உம்முள்
ஏகி ஒருசிறு எள்ளள வேனும் இனியகவித்
தாக மதனையே தூண்டிக் கவிவகை தாம்பலவும்
ஏகம் எனஎண்ணி ஏற்றிட வைக்கும் மரபினையே! (10)

(கோப்பையின் அமைப்பு: கட்டளைக் கலித்துறை அந்தாதி)
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்