விழி தூர கவனம்

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

தமிழ்மணவாளன்


விரிந்து கிடக்கும் பிரமாண்டத்தின் முன்

குவிந்து கிடக்கும் ஜனத்திரள்

வியப்பை விழுங்கியபடி

வாழ்வின் மொத்த சந்தோஷத்தையும்

வாரியெடுத்துச் சேர்க்கின்றன

பாதங்களில்

தொடர்ந்த பேரலைகள் நுரைத்துப் பொங்கி

.

அலைகள் மோதவும்

அநேகமாய் பின்னகர்ந்த

அத்தனை சந்தோஷத்தையும்

அப்படியே ஏற்பதில் அச்சமுற்றபடி.

நுரையீரல் கனம் குறைந்த

காற்றை ஊடுருவவும்

பொன்னிற ஒளியிழைகள்

அனைத்துக்கும் தயார்படுத்தும்

மனசையும்

மணல் வெளியையும்.

புரவியேறித் திரும்பும் பிள்ளைகள்

இறங்குகிறார்கள்

அண்டை நாட்டை வென்று திரும்பிய

அந்தக்கால இளவரசனாய்.

வளைய வளைய வரும்

சிறுவனின் வயிறெண்ணி

வாங்கத்தான் வேண்டும்

சுண்டலும், முறுக்கும்.

சாயங்காலம் கடற்கரையின்

சராசரி காட்சிகள் தாம்

யாருக்கும் வாய்க்குமிது

.

பரந்து கிடக்கும் கடற்பரப்பின்

வரிக்குதிரையொன்று

பறக்கவுமியலாது, மூழ்கியும் விடாது

பயணிக்கும் கண்தூரம்.

கடற்கரை செல்லும் போதெல்லாம்

இந்தக் காட்சியைக் காணாமல்

வீடு திரும்பியதில்லை

ஒரு போதும்.

tamilmanavalan@yahoo.co.in

Series Navigation

தமிழ்மணவாளன்

தமிழ்மணவாளன்