ஆட்டத்தின் எல்லைகள்

This entry is part of 37 in the series 20030619_Issue

ராபின்


நமக்குத் தெரிந்தே இருக்கிறது
ஆடுவதன் நோக்கமும் அதன் அர்த்தமும்

கனவிலும் பயிற்சியிலும்
நிகழ்த்தப்பட்ட ஒத்திகைகளின்
அரங்கேற்றம் ஆட்ட மைதானங்களில்

கற்றுக் கொண்ட ஆட்ட முறைகள்
தேர்ந்து கொண்ட நுணுக்கங்கள்
அமைத்துக் கொள்ளும் வியூகங்கள்
இவையாவும் கொண்ட
அனுமானங்கள் மீதுதான்
நமது ஆட்டங்கள் யாவும்

அனுமானங்களின் முடிவிலும்
தொடர்கின்றன ஆட்டங்கள்

விதிமுறைப் புத்தகங்களில்
இருந்ததில்லை, இருப்பதுவுமில்லை
ஆட்டத்தின் தீர்ப்புகள்

இரு முனை விளிம்புகளில்
குச்சிகளை இலக்காக்கி
எல்லைகளின் கோடுகளையும்
வரைந்து கொண்டு
விரிந்து கிடக்கும் காலப்பெருவெளியில்
குறிபார்த்துதான் பந்தை வீசுகிறாய்

மட்டை கொண்டு சுழற்றி
அடித்தேயாக வேண்டும்
மாய பெருவெளியில் நான்
தொலைந்து போகாதிருக்க

மடக்கி பிடித்துப் போடும்
உத்திகளுடன் தளைகளயாய் சிலர்

வியூகங்களும் தந்திரங்களும்
தருவதில்லை யென்றும்
என் மட்டைக்கு ஓய்வு

எல்லைகளைக் கடப்பதில்தான்
இருக்கிறது
எனது இருத்தலின் அர்த்தங்கள்

amvrobin@yahoo.com

Series Navigation