குருடு, செவிடு, சனநாயகம்!

This entry is part of 42 in the series 20030615_Issue

கரு.திருவரசு


கண்ணனுக்கோர் கண்ணாடி கண்ணகி வாங்கிவந்தாள்
கண்ணகியின் காதுகளில் மாட்டும் கருவியொன்றைக்
கண்ணனும் வாங்கிவந்தான்! காதலர் ஆயினரே!
அண்ணலவன் கண்ணாடிக் கண்ணாலே நோக்கியொரு
பண்ணிசைத்தான், காதலுக்கே பண்ணமைத்துப் பாட்டிசைத்தான்!
பெண்ணவளும் செவிகளிலே மின்கலத்தின் ஒத்துழைப்பால்
கேட்கும் கருவிகளை மாட்டி இசைகேட்டாள்!
பாட்டில் இருநெஞ்சும் பால்போலப் பொங்கினவே!

காதலுக் கடுத்துவரும் காட்சி திருமணமே
காதலரும் பெற்றோரைக் கண்டனர், கேட்டனரே!

கண்ணனின் தந்தை ‘கதகளி ‘யொன் றாடிவிட்டுப்
பெண்ணா கிடைக்கவில்லை, பேயனே நீயேன்
இருசெவியும் கேளாப் பெருஞ்செவிடைத் தேர்ந்தாய்
ஒருசெவிட்டுப் பெண்ணைநான் மருமகளாய் ஒப்பேன்நான்!
என்றவனை ஏசினார், என்னய்யா நீதியிது
இன்றும் உலகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும்
துண்டுபடும் நீதிகளா, மாந்தப் பொறிகளிலே
கண்கெட்டால் குற்றமிலை, காதுகெட்டால் நொட்டையா ?

கண்ணனுக்குக் கண்மங்கல் கண்ணாடி மாட்டினான்
கண்ணகிக்குக் காதுமந்தம் காதிலெதோ வைத்தனள்
கண்ணன் குருடனெனக் காணா உலகமிது
கண்ணகியை மட்டும் செவிடியெனச் சொல்வதென்ன ?

மங்கலுக்குக் கண்ணாடி மாட்டலாம், காதுகொஞ்சம்
மந்தம் செவிக்கருவி மாட்டினால் என்னகுறை ?

கண்ணாடி மாட்டல் கவர்ச்சியாய்ப் போனதுவும்
கண்ணாடிக் கூட்டம் கணக்கில் பெருகியதும்
எங்கும் எதிலும் பெரும்பான்மை ஏற்றமென்னும்
சங்கதியில் நீதி சரண்!

****
thiruv@pc.jaring.my

Series Navigation