பிறழ்வு

This entry is part of 42 in the series 20030615_Issue

ஆதர்ஷ் ராவ்


நேற்றைய நிகழ்வுகளின் நாளைய விளைவுகள்
என் இன்றைய நிஜத்தை மறைக்கின்றன

சென்றதும் வருவதுமான காலங்களின் பயங்கள்
என் நிகழ்கால நொடிகளை நிறைக்கின்றன

நேற்றைக்கான ப்ராயச்சித்தங்களிலும் நாளைக்கான
ஆயத்தங்களிலும் இதோ இந்த நொடி போயேபோச்சு

காலத்தில் முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்வதில்
நான் நிகழ்காலத்தில் நிற்பதே இல்லை

நான் பயப்படும் விஷயங்கள் நடப்பதேயில்லை
இருந்தும் பயங்களை நான் விடுவதாயில்லை

பழைய பயங்களகன்று புதிய நம்பிக்கைகள்
தோன்றவில்லை; புதிய பயங்களே முளைக்கின்றன

பயங்களுக்குப் பழகிவிட்டதால் பயமில்லாமல் இருப்பதற்கே
நான் பயப்படத் தொடங்கிவிட்டேன்

சேற்றுக்குள் உழலும் பன்றிபோல பயத்தில்
உழன்றுகொண்டு நிதரிசனங்களை மறுக்கிறேன்

பயச்சுழல்கள் முடிந்து நான் விடுபடுமுன்
என் வாழ்க்கை முழுவதும் தொலைத்திருபேன்

இது அத்தனையும் கேட்டுவிட்டு, உனக்கு
மனச்சிதைவென்று சொல்வீர்களென பயப்படுகிறேன்

itsaadharsh@hotmail.com

Series Navigation