தவம்

This entry is part of 42 in the series 20030615_Issue

ஜெயந்தி சேது


ஏறாத கோவிலில்லை
வேண்டாத தெய்வமில்லை
கேட்பதெல்லாம்..
ஆசையாய் அம்மா என்றழைத்து
வெற்றுடம்பை உயிர்கொண்டு நிரப்பும் சிறுஉயிர்

புலனனைத்தும் அடக்கி
புலால் ஒதுக்கி
வெளியுலகம் மறந்து
வெற்றிடத்தில் மனம் செலுத்தி
உயிர்க்காலில் செய்யும் தவங்களிவை…

என்ன பயன் ?
அனுதாபப் பார்வைகளால் அடிவாங்கிச் செய்த
அடிப்பிரதட்சணங்கள் அனர்த்தமாய்போயிருக்கின்றன..

தவங்களும் வரங்களும்
தவறான கற்பனைகள் என்று
கண்விழித்து நிஜவுலகம் தரிசிக்க
கண்ணீரோடு கைகூப்பும் ஆதரவற்ற மழலைகள்

யாரோ பெற்று யாருமே பெற்றுக்கொள்ளாத வரங்கள்…

எல்லா கோவில்கள் அருகேயும்
ஓர் குழந்தைகள் இல்லம் வேண்டும்..

கடவுள்கள் கண்திறப்பதில்லை என்று
கண்மூடிச் சொல்லும் மனிதர்களுக்காகவேனும்…!!

***
jeyanthi.sethu@attws.com

Series Navigation