காலி இருக்கைகள்

This entry is part of 42 in the series 20030615_Issue

ராபின்


வானின் மோனத்தில்
உறைந்திருந்த மேகங்கள்
மண்ணின் சலனத்தில்
ஆவல் கொண்டிறங்கிய போது
மழைத்துளிகளாய் சிதறடிக்கப் பட்டன

மோனம் சிதறிய
துளிகளின் அகங்கார சீற்றங்கள்
கணக்காய் கட்டமைக்கப்பட்ட
வடிகால்களில் வடிந்தோடின

சிதறிப்போன மேகத்துளிகளை
தன் பொன்னிற ஒளிக்கதிர்கள்
கொண்டு மீட்க முனைந்தான் கதிரவன்

காலத்தின் பின்சென்ற வெள்ளத்தின்
தடங்கள் உலர்கின்றன மெதுவாய்

ஈரமற்ற சாலையின் ஓரமாய்
ஒதுக்கப்பட்ட சிறிய இடத்தில்
புற்களும் புட்களும் சூழ்ந்திருக்க
சருகுகளை கண்ணீர்த் துளிகளுடன்
உதிர்த்துக் கொண்டிருந்தன மரங்கள்

புதிரான கோலங்கள்
நேர்த்தியாய் வடிக்கப்பட்டு
வரிசையாய் சில இருக்கைகள்

குறும்புக் கண்கள் கொண்டு
கூராய் பார்த்தவாறு, தாயுடன்
நடைபழகும் மழலைச் செல்வம்

பள்ளியில் தொலைத்த தனது
சுதந்திரத்தை மீட்ட உற்சாகமாய்
துள்ளிச் செல்லும் பள்ளிச்சிறுமி

யெளவனத்தின் துடிப்பினை
கண்ஜாடையின் ஓரத்தில் காட்டியபின்
கழுத்து திருப்பிச் செல்லும் நங்கைகள்

அலுவல்களின் ஆக்கிரமிப்பில்
சுயத்தினைத் தொலைத்த ஏக்கமாய்
வெறித்த பார்வையுடன்
விறைப்பாய் செல்லும் இயந்திர மனிதர்கள்

உதிர்ந்து கிடக்கும் சருகுகளை
செருப்புக் கால்கள் கொண்டு
தோய்த்தவறு செல்லும் மூதாட்டி

சலனம் அனைத்தும் ஓய்ந்தபின்னும்
காலியாகவே இருக்கின்றன
எனது பக்கத்து இருக்கைகள்

புலம் பெயர்ந்ததன்
அடைமொழி தாங்கிச் செல்லும்
மற்றொரு மாலைப் பொழுது

— ராபின்
amvrobin@yahoo.com

Series Navigation