மனசே! இதோ ஒரு பர்கோலாக்ஸ் ப்ளீஸ்!

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

ருத்ரா.


ஆட்டுமந்தைகளே! வாருங்கள்.
தலையை ஆட்டி ஆட்டி
காதுகளை விடைத்துக்கொண்டு
கண்களில் மத்தாப்பு
கொளுத்திக்கொண்டு
நான் சொல்லுவதை எல்லாம்
காதுகள் வழியாக
தின்று பாருங்கள்.
செந்தில்-கவுண்டமணி ஜோக்குகள்
அதில் பொதிந்திருக்கும்.
‘சென் ‘ புத்த துறவியின்
பொன்மொழிகளும்
குல்லா போட்ட முல்லாக்கதைகளும்
விரவியிருக்கும்.
ஏதோ ஒரு நண்பர்
அனுபவித்த அவஸ்தைகளின்
சுவாரஸ்ய கோலங்கள்
கலைடோஸ்கோப் காட்சிகளாய்
வார்த்தைகளில் ஜாலம் காட்டும்.
அதில்
ஏதோ ஒரு தொழிலதிபர்
ஒன்றே முக்காலணாவை
வைத்துக்கொண்டு
கூடவே
ஒரு ‘ஓம் ‘ எனும் மந்திரத்தையும்
சேர்த்து வைத்துக்கொண்டு
கோடாஸ்வரர் ஆன
அம்புலிமாமாக்கதைகள்
ஆயிரம் இருக்கும்.
இப்படியாகத்தானே
குட்டிக்கதைகள்
நிறைய கரைத்துக் குடித்து
உங்கள் மீது
உமிழ்ந்து காட்டுவேன்.
இந்த நம்பிக்கைக் கதைகளும்
உற்சாகக்கதைளும்
சாராம்சத்தில்
‘லாட்டரி விளம்பரங்களை ‘த்தவிர
வேறொன்றுமில்லை.
லாட்டரி விழுந்த
ஒரு சீட்டு மட்டுமே ‘கைலாசம் ‘
மற்றவையெல்லம்
வெறும் கபாலங்கள்.
ஆன்மீகம் சொல்லாத
விஞ்ஞான சூத்திரமா
ஐன்ஸ்டான் சொல்லிவிட்டான் ?
E=mc^2 தான்.
யார் இல்லை என்றார்கள் ?
E என்றால் ஈஸ்வரன்.
M என்றால் மகாதேவன்.
C என்றால் சர்வேஸ்வரன்.
ஆற்றல் என்பது ஒளியின்
துகளா ? அலையா ?
துகள் போலவும் இல்லாத
அலை போலவும் இல்லாத
ஒளி அது.
இன்னும் புரியவில்லையா ?
ஆனந்த தாண்டவம் புரியும்
அந்த ‘நடராஜ பெருமானின் ‘
இடுப்பை பாருங்கள் புரியும்.
இருப்பது போலவும்
இல்லாது போலவும்
தெரியும் இடுப்பு போன்றது தான்
அந்த ஐன்ஸ்டான் சூத்திரம்.
நாங்கள் என்ன அடிமடையர்களா ?
எம் எஸ்ஸி பி எச் டி எல்லாம்
ருசி பார்த்துவிட்டு தான்
இந்த காவிக்காட்டுக்குள்
ஆன்மீகம் தேடுகிறோம்.
அதனால் விஞ்ஞான பூர்வமான
அஞ்ஞான மெய்ஞ்ஞான்மே
எங்கள் லட்சியம்.
இது மட்டுமா ?
வேண்டுமானால்
ஜே.கிருஷ்ணமூர்த்தியையும்
கொஞ்சம்
தொட்டுக்காட்டுவோம்
‘புல்லின் இதழ்களோடு ‘
கொஞ்சம்
புரண்டு விளையாடி
‘வால்ட் விட்மனோடு ‘
சடு குடு விளையாடுவோம்.
‘உமர் கயாமையும் ‘
ஊற்றி
கரைசல் தயார் செய்து
சொற்களையே
காக்டெயில் கதம்பம் செய்து
விளம்பர மசாலாக்களின்
மோப்பம் பிடித்த
வாரப்பத்திரிகைகள் வழியாக
வார்த்து வார்த்துக் கொடுப்போம்.
ஆதலினால்
சொல்கிறோம்:
ஏ! மானிடர்களே!
குரங்கிலிருந்து வந்தாலூம்
அந்த மனக்குரங்கை மட்டும்
உங்களுக்குள்ளிருந்து
அடித்து விரட்டுங்கள்.
மனசை பாறாங்கல்
ஆக்காதீர்கள் .
பொறாமை
காமக் குரோதங்களை
ஒழிக்க
ருத்திராட்சங்களை
உருட்டுங்கள்.
மரணபயத்தை வெல்வதற்காக
மந்திரங்கள் சொல்வோம்.
யாகங்கள் நடத்துவோம்.
இந்தக்கூத்தில்
மனித நேயம்
சவப்பெட்டிக்குள்
வீழ்த்தப்பட்டு
ஆணியடிக்கப்படலாம்.
மனித அன்பு
சுடுகாட்டு சாம்பலாய்
கரைந்து போகலாம்.
ஆனாலும்
ஆன்மீகத்தில்
கரைந்து போகலாம்
வாருங்கள்.
என் கீதைச் சொற்பொழிவில்
ஒரு மழை பெய்வது
உங்களுக்கு இன்னும்
குளிர்ச்சியூட்டவில்லையா ?
உங்களுக்குள்
அந்த ‘ஆன்மீகத்தேடலின் ‘
உடுக்கை அடிக்கவில்லயா ?
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது.
ஆம்.
எது இடிக்கப்பட்டதோ
அது நன்றாகவே இடிக்கப்பட்டது.
எது நடந்து கொண்டிருக்கிறதோ
அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது.
ஆம்.
எது இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ
அது நன்றாகவே இடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
எது நடக்குமோ
அது நன்றாகவே நடக்கும்.
ஆம்.
எது இன்னும் இடிக்கப்படுமோ
அது இன்னும் நன்றாகவே இடிக்கப்படும்.
அத்வைதம் அழகாய் சொல்கிறது.
இராமன் பாபரை இடித்தால் என்ன ?
பாபர் இராமனால் இடிக்கப்பட்டால் என்ன ?
இரண்டுமே ஒன்று தான்.
ஆம்
அத்வைதம் அழகாய் சொல்கிறது.
இது எவ்வளவு தெளிவாய் இருக்கிறது.
மனத்தில்
மற்ற குப்பைகளையெல்லாம்
குவிக்காதீர்கள்.
மனத்தின் மலங்களை எல்லாம்
அப்புறப்படுத்துங்கள்.
அதற்கு எடுத்துக்கொள்ளுங்கள்
மனசே
இதோ ஒரு ‘பர்கோலேக்ஸ் ‘ ப்ளீஸ்!

===ருத்ரா.
kasthurisivan@eth.net

Series Navigation

ருத்ரா

ருத்ரா