இரண்டு கவிதைகள்

This entry is part of 34 in the series 20030607_Issue

புதியமாதவி, மும்பை


நான் கணினியல்ல

நினக்காமல் இருப்பதற்கும்
நீ நினைத்தால் அழிப்பதற்கும்
என் இதயம்
உன் கணினியல்ல!!!

பார்க்காமல் இருப்பதற்கும்
அணைக்காமல் தொடுவதற்கும்
என் கண்கள்
உன் காமிராவல்ல!

பேசாமல் இருப்பதற்கும்
பேசியதை மறப்பதற்கும்
என் உள்ளம்
உன் தொலைபேசியல்ல!

அழாமல் இருப்பதற்கும்
அழுதுகொண்டே சிரிப்பதற்கும்
என் வாழ்க்கை
உன் மேடையல்ல.!!


உயிர்க்காதலி

மெளனம்-
உன்னதமான மொழி
மனிதன் படைத்த
அத்தனை மொழிகளும்
அர்த்தமிழக்கும்
சத்திய தவத்தில்
மெளனமே
நீதான் –
உண்மையின் மொழி
ஆனால்-
உண்மைகள் என்றும்
ஊமையுடன் வாழ்ந்தால்
ஊமையின் அர்த்தம்கூட
உண்மையிழந்து போய்விடுமே.!

உண்மைகளை
மெளனத்தில்
அடைகாத்தது போதும்.!
இனி-
சத்தியக் குஞ்சுகள்
உன் ஓடுகளை
உடைக்கட்டும்.!
பிறக்கும்
புதிய குஞ்சுகளின்
புதியராகம்
உனக்குச் சொல்லும்..
உன் –
உயிரின் காதலி
யாரென்று.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation