மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு

This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

மனுஷ்ய புத்திரன்


இன்று
எங்கேனும்
சாத்தியமாகலாம்
இதம் தரும் ஒரு மாலை

இன்று
யாருக்கேனும்
நிகழலாம்
எதிர்பார்ப்புகளற்ற ஒரு நேசம்

இன்று
யாரோ ஒருவரின்
ஆறாத்துயருள்ள காத்திருப்பு
முடிவுக்கு வரலாம்

கண்ணே
இன்று
நீ எடுத்துக்கொள்
இதோ இந்த
சீஸனினின் முதல் மாம்பழத்தை


இன்று ஏழாவது முறையாக
பேனாதிருடும்
பேதைக் குழந்தையே

திருடு இம்முறை
இந்த எழுத்தை
இந்த எழுத்து நகரும் புற்றுகளை
இந்தப் புற்றுகள் வளரும் நிலங்களை
இந்த நிலத்தில் தலைசாய்க்கமுடியாத ஒருவனை
இந்த ஒருவனை இன்னும் வாழ்த்தூண்டும் நம்பிக்கைகளை
இந்த நம்பிகைகளை விதைக்கும் பேனாவை


உன் அமைதி வேளை
ஒரு கண்ணாடிச் சமவெளி

யாரும் வருவதில்லை
யாதும் ஒலிப்பதில்லை
ஏதும் நிகழ்வதில்லை

உன்னைக்கூட அனுமதிக்காத
உன் அமைதிவேளை
ஒரு நாள்
தன்னைத் தானே கலைத்துக்கொண்டு
தேம்புகிறது


கொஞ்சம் அவகாசம் கொடு

வெய்யில் சற்றே தணியட்டும்
என் குழந்தைகள் வீடு திரும்பவேண்டும்
நான் என் காலணிகளை உரிய இடத்தில் வைத்துவிடுகிறேன்
இந்த அறை இவ்வளவு ஒழுங்கற்று இருக்கலாகாது
நான் ஒரு பழைய கடித்தை படிக்கவேண்டும்
ஒரு பழைய புகைப்படத்தை பாதுகாப்பாக ஒப்படைக்கவேண்டும்
என் நாயின் கண்களில் படரும் சந்தேகத்தைப்போக்கவேண்டும்
இறுதியாக எல்லாத் தடயங்களையும் அழித்துவிடவேண்டும்

கொஞ்சம் அவகாசம் கொடு.


lally@eth.net

Series Navigation

மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்