‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘

This entry is part of 31 in the series 20030525_Issue

கரு.திருவரசு


எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம்
எங்கும்நான் போய்வருவேன் இல்லை அச்சம்!
எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம்
எவருடனும் சென்றிடுவேன் என்ன வெட்கம் ?
எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம்
எப்படியும் பழகிடுவேன் என்ன சிக்கல் ?
எனக்கிருக்கும் துணிச்சல்வகை இன்னும் போகும்!
இதையேஓர் பெண்சொன்னால் என்ன ஆகும் ?

என்நெஞ்சம் எவருக்கும் இளகும் நெஞ்சம்
எனதென்று மறைக்காமல் ஈவேன் கொஞ்சம்!
என்நெஞ்சம் இல்லையெனச் சொல்ல அஞ்சும்
எவர்வந்து கேட்டாலும் இணங்கும் கொஞ்சம்!
என்நெஞ்சம் எப்போதும் கருணை நெஞ்சம்
எதுவேண்டும் என்றாலும் தருவேன் கொஞ்சம்!
என்நெஞ்சம் எல்லார்க்கும் இனிக்கும் நெஞ்சம்!
இதையேஓர் பெண்சொன்னால் என்ன ஆகும் ?

இரவுபகல் தெரியாமல் மகிழ்ந்தி ருக்கும்
என்மகிழ்ச்சி நிலைபலர்க்கு வியப்ப ளிக்கும்!
இரவுபகல் பாராத பயணம், ஆங்கே
எத்தனையோ சந்திப்பு, விடுதி தங்கல்
இரவுபகல் இடம்வசதி பார்த்த தில்லை
ஏதேதோ செய்வேன்நான் பணத்துக் காக!
இரவுபகல் எல்லாமே மகிழச்சிக் காக!
இதையேஓர் பெண்சொன்னால் என்ன ஆகும் ?

thiruv@pc.jaring.my

Series Navigation