வரம்

This entry is part of 28 in the series 20030504_Issue

பவளமணி பிரகாசம்


அழகாய் மடல் விரிக்கும் வண்ண மலரும்
அடடா! வாடி வதங்கிடும் வெகு விரைவிலே.
உப்புக் கடலில் ஊறிடும் ஆமையதுவும்
உயிருடனிருக்கும் பல நூறு வருடமே.

பிறந்த உடனே சிசுக்கள் சில மரிப்பதேன் ?
வராத மரணத்திற்கு சருகுகள் பல தவிப்பதேன் ?
வாழ்வின் நீளம் திண்ணமில்லையோ ?
பிறவியை வீணாய் எண்ணமுடியுமோ ?

வாழ்வின் பொருளே விடுகதைதானோ ?
சித்தம் போல் திசை மாறும் காற்றோ ?
விளங்க முடியா தொடர்கதையாமோ ?
விசித்திரமான நாடகந்தானோ ?

எத்தனை காலம் என்றெண்ணிடாமல்
எத்தனை சிறப்பாய் என எழுந்திடலாம்.
வானத்து வால் நட்சத்திரம் போலொரு
மின்னிடும் தனிப் பாதை வகுத்திடலாம்.

பரந்து கிடக்குது நீலவானம்-
பாடித் திரியும் பறவைகளாவோம்.
எங்கும் நிறைந்தது இயற்கை-
பொங்கும் அழகை பருகிடுவோம்.

புதுப் புனல் போல புறப்படுவோம்,
பொதுநலன் மட்டும் கருதிடுவோம்,
நாளைய உலகை படைத்திடுவோம்,
வரமாய் வாழ்வை மாற்றிடுவோம்.
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation