இன்னும் தொலையாத இன்னல்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

அனந்த்


0o0o0o0

கன்னக் குழியும் கருநிற விழிகளும்
… கற்றைக் குழலும் கலகல வெனவரும்
கன்னல் மொழியும் கவர்தளிர் உடலொடு
… கட்டத் துடிக்கும் இளமையும் துளுமொரு
மின்னற் பொறியாய் விளங்கிடு வனிதையை
… மெச்சல் விடுத்து வெறும்பண வெறியராய்
இன்னும் கொஞ்சம் கொடு!கொடு! எனும்வதை
… இன்றும் நடத்தல் இழிவது! இழிவதே!

இதன் விளைவாக:

தந்தை:

இன்னும்கொஞ் சம்உடல் வேர்த்துப்
… பணம் சேர்த்து, வரன் பார்த்து – பெண்ணை
ஏற்றிடு வேன்கரை சேர்த்து- என்றன்

….. கனவேஇது நனவாகிட
…. இறையேஅருள் விரைவாகவே

உன்னைத்தி னம்தினம் வேண்டி – மனம்
ஓய்ந்துவிட் டேன்இந்த ஆண்டி!

மகள்:

இன்னும்கொஞ் சம்வய தேறி
… உரு மாறி, உளம் நாறி – வாழ்க்கை
எங்குசெல் லும்தடம் மாறி- தந்தை

….. பிடியில்ஒரு கிளியேஎனத்
….. துடியேன்இனி மனமேவிழை

என்னுயிர்க் காதல னோடு – வானில்
ஏகிடு வேன்வெளி நாடு!

கவி:

என்றுதொ லையுமிப் பாபம்
… பரிதாபம் முன்னைச் சாபம் -என்னை
வாட்டுதம் மாஅனல் கோபம்- இந்

….. தியநாட்டினில் நடமாடிடும்
….. கயமைஇது விடவேஇனி

இன்னும்கொஞ் சம்படி தாண்டும் – பல
ஏந்திழை யர்வரல் வேண்டும்!

0o0o0o0

dbsvsa@nus.edu.sg

Series Navigation

அனந்த்

அனந்த்