வழி மாறிய தென்றல்

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

மணோ


எத்தனை மாதங்கள்,
உன் அறிமுகம்
நான் சூல் கொண்டது ?

எத்தனை கிழமைகள்
உன் பாதச்சுவடியால்
என் பாதி பூத்தது ?

எத்தனை கதவுகள்
உன் வரவாய்
காத்திருந்து கரைந்தது ?

எத்தனை கனவுகள்
உன் பறிப்பிற்காய்
கவிதை ஆனது ?

எத்தனை மேகங்கள்
உன் நலமறிய
எனக்கு தூதாகிப் போனது ?

எத்தனை மின்னல்கள்
கள்ளமில்லா உன் சிரிப்பாய்,
எனக்குள் என்னையே
வெளுச்சம் காட்டியது ?

எத்தனை எத்தனை இரவுகள்,
இன்பமும், இயற்றலுமாய்,
‘இனி வேறொன்றில்லாததாய் ‘……!! ?

எல்லாம் ‘நேற்றாய் ‘ ஆனதோ ?

எதிர்பார்த்து ஸ்ருதி சேர்த்து,
எடுத்து வைத்த மனசுக்குள்
ஏதேதோ பிதற்றல்கள்,
ஒவ்வொன்றும் அபஸ்வரமாய்!

காலம் வரைந்த ஓவியமாய்
கிழிக்கப்பட்ட என் கவிதைகள்,
கிழியப்பார்க்கும் என் உயிராய்…..

கிடைத்த சங்கை,
கீறிப் பார்க்கும் , கீழ்த்தர மனிதர்கள்….
இதோ,
கீறல்விழுந்த கானமாய்,
உன் சாரல் தேடும் இந்தச் சின்ன மழை!!

பெய்யத் தான் வந்தேன்,
நனைய வைத்து விட்டாய்!!
மலரத்தான் வந்தேன்,
மறைந்து சென்று விட்டாய்!
பேச வந்ததையெல்லாம்
அலையாய், மணலாய், ஆற்றாமையாய்…
ஊமையாய் எனக்குள்ளே புதைத்துவைத்துவிட்டு
பெய்யாமலே போகிறேன்,
பேசாமலே போகிறேன்,

போகுமிடம் தெரியாது,
வந்த இடமும் அறியாது,
காற்றாய், நதியாய்,
வழிமாறிப் போவேனோ ?

என் சுவட்டை
நானே அழித்துக்கொண்டு
ஆனந்தமாய் ….
அசைவற்றுப் போவேனோ ?

திசை மாறிய கன்றாய்,
திக்கற்று சுழன்று
சூறாவளிக்குள் சுரமற்றுப் போகும்முன்,
வீசு தென்றலே, என்னிடம்
பேசு தென்றலே!!
**********
tamilmano@rediffmail.com

Series Navigation

மணோ

மணோ