கனவாய்…

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

மண்ணாந்தை


ஆதிப்பெருமனதின்
கனவு வெளியதனில்
ஒருமைச் சூல் கொண்ட
மேகங்கள் உள்ளூடே

மென்அலகு கனவதிர்வில்

பிரபஞ்சங்கள், காலங்கள்
காலவெளியதனில் உறைந்திடும் மாறிலிகள்
பிறப்பெடுக்கும்.
பிறப்புற்ற பின்னர் அவை
வேக விரிவேகும்.
மாறிலிகள் விதி பற்றி
விரிந்து படர்ந்து பின்னர்
உள்ளொடுங்கும்.

ஆயினும்
அதற்கிடையில்
தாரகைகள் தமைச் சுற்றும் சிறுகோள்கள்
அவை சிலவில்
உயிர் என்னும் ஒரு முகிழ்ச்சி
பின்
அச்சிறு முகிழ்ச்சி
பிரக்ஞை என மடல் விரியும்.

ஆயிரம் மடல் விரியும்
அம்மலரும்
மடல் விரிந்து
தன்னை கனவீன்ற
ஆதியை பிரதிபலிக்கும்.
பிரதிபலிக்கும் அத்தருணம்
தன் கனவில் தன் முகத்தை
தான் கண்ட அதிர்ச்சியிலே
கனவு கலையும்
அப்பெருங் கனவு கலைகையிலே

துகள் அழியும் அலை அழியும்
அண்ட வெளி அழியும்
கால கதியும் தன் ஓட்டங்கள்
நின்றழியும்
கனவு வெளியதனை அழிக்குமப் பெரு ஊழி
தானும் அழியும்
தன்னையே தின்றழியும்

அழியும் கனவினிலே
ஆயிரம் மடல் விரிந்த
அம்மலரும் கரையும்.
அம்மலர் கரைகையிலே
ஆதிப்பெருமனதும் கனவென்ற
கதையறியும்.

Series Navigation

மண்ணாந்தை

மண்ணாந்தை