சுடும்வரையில் நெருப்பு…

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

மணவழகன். ஆ


அன்போ, கோவமோ
உள்ளத்து உணர்வுகளை
ஒளிக்காமல் காட்டிவிட்டால்…
சின்னப்பிள்ளை புத்தி என்பீர்
‘சிடுமூஞ்சி ‘ இவன் என்பீர்…

பணம் மட்டும் வாழ்க்கை இல்லை,
பக்குவமாய்ச் சொன்னாலும்…
உதவாது வாதம் என்பீர்..
‘ஊதாரி ‘ இவன் என்பீர்…!

தென்றல் அது மாடிக்குச் சொந்தம்…
தீ மட்டும் தெரு கோடிக்குச் சொந்தமா ? – இனியாவது
திருந்தச் சொன்னால்…
திரும்பாதே பக்கம் என்பீர்,
‘தீவிரவாதி ‘ இவன் என்பீர்!

பருத்தியும் பழுக்கும் – இலவம்
பஞ்சியும் பழுக்கும்!
பசிபோக்குமா இவையாவும் !
பணம் பார்த்துப் பழகாதே – நல்ல
குணம் பார்த்துப் பழகு என்றால்….
மெத்த படித்த திமிரா என்பீர்…
‘மேதாவி ‘ இவன் என்பீர்!

பிள்ளையார் பால் குடிக்கிறாரா ? – அட
பித்தர்களே – இங்கே
பிறந்த குழந்தைப் பாலுக்கழுகிறதே…- மனம்
பரிதவித்துச் சொல்லிவிட்டால்…
பார்த்துக் கொள்வார் கடவுள் என்பீர்…
‘பைத்தியமோ ‘ இவன் என்பீர்!

தன்மானம் இழக்கும் செயல்
தாங்கிக்கொள்ள முடியாது!
தயங்காமல் கேட்டுவிட்டால்…
‘தலைகீழ் ‘ நடப்பான் என்பீர்,
‘தலைகனம் ‘ இவனுக்கென்பீர்!

கை நீட்டி தாலி அறுப்பான்!
கண் முன்னே கழுத்தும் அறுப்பான்!
கோணலாக புத்தி கொண்டு – பல
கொடுமைகள் செய்திடுவான்…
கொதித்தெழுந்து கேட்டுவிட்டால்…
கொஞ்சம் கூட பொறுமை இல்லை…
‘கோவக்காரன் ‘ இவன் என்பீர் !

அள்ளி அள்ளி கொட்டிடுவீர்
அத்தனையும் உண்டியலில்!
அநாதை இல்லங்கள் அநாதையாய் இங்குண்டு!
அடுத்தவேளை உணவிற்கு ஆளாய் பறந்திருக்கும்
ஆட்கள் இங்கே கோடி உண்டு!
மனம் கலங்கி சொல்லி விட்டால்…
மாரியாத்தா குத்தம் என்பீர்,
‘மடையனா ‘ இவன் என்பீர் !

உதவாததை எடுத்துச் சொல்லி – மக்களுக்கு
உதவும் வகைச் சொல்லிவிட்டால்…
ஒட்டு மொத்தப் பெயராக
‘நாத்திகன் ‘ இவன் எப்பீர்…
நட்பே கூடாதென்பீர்…!

நாட்டுக்கு நல்லது நினைப்போன்
நாத்திகன் என்றிட்டால் …
போடா போ…!
இருந்து விட்டுப் போகிறேன்
நான் ‘நாத்திகனாகவே ‘

*********
a_manavazhahan@hotmail.com

Series Navigation

மணவழகன். ஆ

மணவழகன். ஆ