லண்டனுக்கு வெகு அருகில் மிக மலிவாக – உரைவெண்பா

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


சென்னையில் புறநகர்ப் பகுதியில் வீட்டுமனை விற்கிறவர்கள் தினப்பத்திரிகையில் விளம்பரம் செய்வார்கள் – ‘சென்னைக்கு மிக அருகில் உள்ள செங்கல்பட்டுக்கு நாலே முக்கால் கிலோமீட்டர் தள்ளி சுவையான குடிநீர், அருமையான சாலைகள். பள்ளிக்கூடம், தியேட்டர், கடைகண்ணி இத்யாதிகளோடு திடார்நகர் உருவாகி வருகிறது… வெகு மலிவு விலையில் பிளாட்டுகள் ..வந்து பார்த்து வாங்குங்கள் .. எங்கள் செலவிலேயே கூட்டிப் போகிறோம் ‘

லொடலொடவென்று குலுங்கிப் போகும் ஓட்டை பஸ்ஸில் நெருக்கி அடித்துக் கொண்டு உட்கார்ந்து கிளம்பி கல்பகோடி காலம் பயணம் செய்து ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கும் நேரத்தில், ‘இறங்குங்க சார் .. இங்கே தான் நம்ம குடியிருப்பு வருது .. ‘ என்று இறக்கி விடுவார்கள். அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெட்டவெளி .. நாலு எருமை மாடு நிம்மதியாக முழுகிக் கிடக்கும் ஒரு சேற்றுக் குட்டை, ஜல்லி ஏற்றின லாரிகள் விரையும் பெருவழி ..

கோலி சோடா குடித்து விட்டு, ஓரமாக ஒண்ணுக்கு இருந்துவிட்டு பங்களாக் கனவுகளோடு சிலரும் ஞாயித்துக்கிழமை மத்தியானத் தூக்கம் போச்சே என்ற கோபத்தோடு இன்னும் சிலபேரும் திரும்புவார்கள்.

ஈதிப்படி இருக்க, இங்கே லண்டனில் வீட்டுமனை விற்கிற அண்ணாச்சிகள் நம்ம ஊரு ஆட்களை விட ஒரு படி மேலே போய் விட்டார்கள்.

லண்டன் புறநகரில், அல்லது மேன்செஸ்டர் பக்கம் வீடு வாங்குங்கள். ஒரு பெரிய தோட்டம் இனாம்.

இதுமாதிரி விளம்பரம்.

வீட்டோடு தோட்டமும் சேர்ந்து வருவதால் கொள்ளை மலிவு. சரி வாங்கி விடலாம் என்று பணத்தை முடக்குகிறீர்கள்.

‘டாய்லெட்டை எங்கே கட்டலாம் சார் ? ‘

‘தோட்டத்துலே ஒரு மூலையிலே இருக்கட்டுமே .. ‘

‘உங்க இஷ்டம் சார் .. ‘

வீட்டுக்குக் குடிவந்து விடிகாலையில் வயிற்றைத் தடவிக்கொண்டு எழுந்தால், எங்கேய்யா லெட்ரின் ?

‘இந்தாங்க பிடியுங்க.. ‘

டாய்லெட் பேப்பரா ?

இல்லீங்கோ. விமான டிக்கட். வெனிசூலாவுக்கு.

‘யோவ் என்னய்யா விளையாடறியா ? முட்டிக்கிட்டு வருது .. ‘

‘அதேதான் சார் .. பொடிநடையா ஏர்போர்ட் போய் ஃபிளைட்டைப் பிடிச்சு வெனிசூலா நாட்டுக்குப் போயிடுங்க .. அங்கே ஒரு டாக்சியைப் பிடிச்சு ஏழெட்டு மணி நேரம் சவாரி .. அம்புட்டுத்தான் .. உங்க தோட்டம் .. அதுக்குள்ளே உங்க டாய்லெட் .. என்ஜாய் ‘

வீடு லண்டனில். தோட்டம் ஆயிரம் மைல் தள்ளி வெனிசூலாவில். இது எப்படி இருக்கு ?

கண்ணை மூடிக்கொண்டு காசு முடக்க ஆள் இருக்கும்வரை இந்த மாதிரி யாவாரம் எல்லாம் பிச்சுக்கிட்டுப் போகும் – எங்கேயும்.

யோசித்துக் காசுசேர் யோகமாய் நாள்பார்த்தே
பூசித்துக் கட்டு புதுவீடு – வாசுத்து
சாத்திரம் சொல்லுது பாத்துரூம் வைக்காதே
மூத்திரம் முட்டவெளி ஓடு.

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்