உயர் மொழி !

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

புகாரி, கனடா


சொற்களின் கல்லறையோ – நாக்கு
சுழல்வதால் சுகமில்லையோ ?
பற்களின் கூடுகளில் – சொல்லின்
பசியோடு திரிகின்றதோ ?

சொல்லுங்கள் மெளனிகளே – செவியுள்
சொல்லற்ற ஊமைகளே !
சொல்கின்ற சொல்லென்பதும் – மண்ணில்
செல்லாத காசல்லவோ !

காற்றினில் பிறக்காமலே – உங்கள்
குரல்குஞ்சின் மரணங்களோ ?
தேற்றவும் வழியின்றியே – தேம்புதல்
தேன்மொழித் தாகத்திலோ ?

மூச்சில்லா வேளையிலும் – நெஞ்சின்
பேச்சற்றுப் போவதுண்டோ ?
பேச்சுக்காய் நின்றபோது – இறைவன்
பேசாமல் போனானோ ?

ஆனாலும் துயரில்லையே – இதுவோர்
ஆகாயக் குறையில்லையே
தேனாளும் அபிநயத்தால் – சொற்பூ
தெளிவாகப் பூக்கின்றதே

ஏராள மனக்கனவை – தலையின்
எழிலான அசைவுகளால்
தாராள வார்த்தைகளாய் – கவிதைத்
தரமோடு கூறுகின்றீர் !

அள்ளித்தரும் இயற்கைமொழி – காலம்
அழிக்காத உங்கள்மொழி
சொல்லுக்கினி தாகமுண்டோ – எண்ணச்
சுரப்பிற்கும் மரணமுண்டோ ?

அண்டத்தின் இரத்தமானதும் – அன்பு
இதயத்தின் அமுதமானதும்
உண்டவரின் உயிர்தொடுவதும் – காதல்
உயர்மொழியே ஊமைமொழிதான் !

*
buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி