பனியின் மடியில்….

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

புஷ்பா கிறிஸ்ரி


35cm பனி அளவு, இவ்வளவு என்று சொல்லித் தான் இன்றைய வானிலை அறிக்கையில் அறிவித்திருந்தார்கள். ஆமாம். இன்று நிச்சயம் 30cm பனி கொட்டும் என்றதும்
நெஞ்சில் தூக்கி வாரிப்போட்டது..

கடவுளே! இவ்வளவு பனியா ? யார் செய்த பாவம் இது ? இந்தப் பனியில் நனைந்து, குழந்தைகள் பாடசாலைக்குச் செல்ல விதியை யார் வைத்தது ?
கால்கள் புதைய, கண்கள் பனிக்க, கைகால்கள் விறைக்க நடந்து போக குளிர் தொண்டையைக் காய வைத்துக் காயம் பண்ணி, மூக்கில் நீர் வடிந்து, கண்கள் நிறைந்து, பாதை
தெரியாமல், கீழே விழுந்து எழுந்து நடக்க.. இந்த நாட்டில் விதி வந்ததோ ? என மனம் வருந்திக் கொண்டேன்.

பிள்ளைகளை அனுப்பி வைத்து விட்டு வீட்டு மூலையில் வந்து ஏற்றிப் போகும் பாடசாலை பஸ்ஸிற்காக அவர்கள் காத்து நிற்க, பஸ் வண்டி வந்து, சிவப்பு விளக்குடன் தடுப்புக்
காட்டி, குழந்தைகளை ஏற்றி நிற்க, பின்னாலும் முன்னாலும் வரும் வாகனங்கள் இந்த வண்டிக்காக தரித்து நின்று, பஸ் வண்டி புறப்பட்ட பின்னரே தமது பயணத்தைத்
தொடங்க வேண்டும் என்னும் போக்குவரத்து விதிமுறைக்கு ஏற்ப நடந்து கொண்டனர்.

இத்தனையையும் எதிர்வீட்டுக் கண்ணாடி யன்னலின் தெரிந்த விம்பத்தில் கண்டு கொண்டு, ‘அப்பாடா, குளிரில் இருந்து கொஞ்சம் என் குழந்தைகள் விடுபட்டு விட்டார்கள்,
என்றாலும் இடைவேளை நேரம் (recess- intervel) விளையாட வெளியே விட்டு விட்டால், இந்த வாண்டுகள் ஒன்றை ஒன்று பனிக்கட்டியால் அடித்து, பனியில் கிடந்து
புரண்டு தவழ்ந்து பண்ணும் அட்டகாசம் தான் தாளமுடியாதன..ஆனால் இதில் விருப்பமில்லாத குழந்தைகள் என்றாலும் அவர்களும் நிச்சயம் வெளியில் நின்று குளிரை
அனுபவிக்கத்தான் வேண்டும். ஆக என் குழந்தைகளும் குளிரில் நிற்க வேண்டியதாகி விட்டதை எண்ணி கவலைப்பட்டது மனது. ‘
நானும் ஆயத்தமானேன். பனி தொடர்ந்து கொட்டிக் கொண்டேயிருந்தது. இனியும் கொட்டினால், பனிக்கு மேல் பனி விழ, பாரம் கூடி, பின் அது இறுகி, அதன் மூலம்
பனி அள்ள முடியாது அவஸ்தைப பட வேண்டுமே என எண்ணிக் கொண்டு ஆயத்தமானேன்.
கைக்கு உறை, காலுக்கு பூட்ஸ், பனி ஆடை, தலைக்குத் தொப்பி.. என்று உடுத்திக் கொண்டு களத்தில் இறங்கினேன். குளிர் குபு குபுவென்று உடம்பு முழுக்கப் பரவி ஓடிக்
கொண்டிருந்தது. பனிக் கரண்டியை கையில் எடுத்து, கொஞ்சம் அள்ளிப் பார்த்தேன். கை கனத்தது.
என்றாலும் அள்ளத்தான் வேண்டும் என்று அள்ளினேன்.

பக்கத்து வீட்டில், முன் வீட்டில், அடுத்த வீட்டில், அதற்கு அடுத்த வீட்டில் எல்லாம் ஒரே நேரம் பனி அள்ளும் கொண்டாட்டம் தான் களை கட்டியிருந்தது.
அவ்வப்போது கொஞ்சம் நிமிர்ந்து மூச்சும் விட்டுக் கொண்டேன். என்றாலும் குளிரை மிஞ்ச முடியவில்லை. கூடவே கொஞ்சம் வியர்க்கவும் தொடங்கியது.
திடிரென்று ஏதோ சத்தம்..
திரும்பி தலையை மூடிக்கிடந்த அந்த பனி ஆடையின் தொப்பியை விலத்தி
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
முன் வீட்டின் பனி முன்றலில், அந்த வீட்டின் பெரியவர், வீழ்ந்து கிடக்க, அவரது மனைவி.. ‘உதவி..உதவி..என்று குரல் கொடுத்தாள்.
அண்டை வீட்டுக்காரர் ஓடிச் சென்று அவளுக்கு உதவி செய்ய,, மற்றவர் ஓடிச் சென்று அந்த அம்மாவிடம் ஆம்புலன்ஸை அழைக்க்ச் சொன்னார்.
இடையில் அந்த அம்மாளே தன் கணவருக்கு வேண்டிய மூச்சுப் பயிற்சி தர முயற்சி செய்து கொண்டிருந்தாள். இத்தனையும் இந்தப் பனி முன்றலில் தான் நடந்து
கொண்டிருந்தது.
ஐந்தே நிமிடங்கள் ஓடி மறைந்தன.
பெறும் கூக்குரலுடன் ஓடி வந்தது ஒரு ஆம்புலன்ஸ்..
அவசரமாக இறங்கி ஓடிச் சென்ற பணியாட்கள், முதலில் அவரை ஒரு ஆள் கிடத்தும் வண்டியில் ஏற்றி சூடான போர்வைகளினால் இறுக்கமாகப் போர்த்தி, வண்டியினுள்
ஏற்றினார்கள்.
அந்த அம்மாவும் வண்டியில் ஏறிக் கொண்டார். முதலுதவி கொடுக்கப் பட்டது.
என்றாலும் வண்டி மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது வைத்தியசாலையை நோக்கி.. என் மனதில் வேண்டுதல் நடந்தது.. கடவுளே! ஒன்றும் அசம்பாவிதம் நடவாமல்
காப்பாற்று.
இந்தக் களேபரத்தில்.. தள்ளும் பனிவேலை கொஞ்சம் தாமதமானாலும், மீண்டும் வேலை தொடர்ந்தது.
பனியை அள்ளி, அள்ளி எத்தினேன். ஒருவாறு பெரிய கும்பம் குறைந்து.. சின்ன சின்ன கவளங்கள் அங்கும் இங்கும் கிடந்தன…
தள்ளும் பனிக் கரண்டியினால், அதனைத் தள்ளி ஓரம் கட்டினேன். உடம்பும், நாரியும் உதவாத நிலைக்கு வந்து விட்டன. அடுத்த வீட்டாரும் மாரடித்து ஓய்ந்த
பாடில்லை.
இனி கொஞ்சம் இடம் வந்து விட்டது,,, தொடர்ந்து கொட்டும் பனிக்கு..
மீண்டும் வந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளலாம் என்று எண்ணிக்கொண்ட படி.. பனிக்கரண்டிகளை கொண்டு வந்து வைத்து விட்டு,
வீட்டினுள் வந்தேன்.
‘அப்பப்பா… வீட்டினுள் நெருப்பாக இருந்தது சூடு. இதுவரை நேரமும் வெளியே நின்றவரை.. வெளியால் குளிரும், ஆடையினுள் வியர்வையுமாக இருந்தது. இப்போது,
ஆடையைக் கழற்றி வீட்டு வாசலில் இருந்த மாட்டியில் மாட்டி விட்டு உள்ளே வர, வெப்பம் தாள முடியவில்லை.. மீண்டும் வெளியே ஓடிப்போகலாமா என்றிருந்தது.
போர்த்திக் கொள்ளாமல் வெறும் தரையில் படுத்துப் புரள வேண்டும் போலிருந்தது.
சரி.. கொஞ்சம் ஆறலாம்… மனதுக்கும் அமைதியாக இருக்கும் என்று நிலத்திலே, அதுவும் மரத்தாலான பலகை நிலத்தில் படுத்துக் கொண்டேன். நேரம் பன்னிரண்டு காட்டியது.
சரி.. மதியச் செய்தி பார்க்கலாம் என்று தொலைக்காட்சியை முடுக்கி விட்டேன். செய்திகள் பல வந்தன.. இறுதியாக வந்த செய்தி.. என் நெஞ்சில் கனத்தை உண்டு
பண்ணியது…
‘பனி தள்ளிக் கொண்டிருந்த 65 வயது மனிதர், நெஞ்சு வலியுடன், பனியில் வீழ்ந்த போது, அயல் வீட்டார் , 911(ஆம்புலன்)ஐ அழைத்து, வைத்தியசாலைக்கு எடுத்துச்
செல்லப் படும் வழியில் அவர் காலமானார் ‘
செய்தி கேட்ட போது, என் நெஞ்சில் சில சிதறல்கள் விழுந்தன..
‘கடவுளே! என்ன இது சோதனை!
ஒரு மணி நேரத்தில் ஒரு மனிதனின் மரணத்தை நிச்சயம் செய்து வைத்து விட்டாயே!. பனி இன்று கொட்டும் போது, இந்த மனிதர் நினைத்திருக் ‘ ‘ மாட்டார், நாளை
தான் உயிரற்ற உடலாகி விட்டிருப்பேனென்றி.
வீட்டிலிருந்து, வெளியே சென்ற அவரது குழந்தைகள், நினைத்திருக்க மாட்டார்கள், வீடு வரும்போது, அப்பா உயிர் உடலை விட்டுப் பிரிந்திருக்கும் என்று…
இல்லை.. இந்த மனிதர், பனிக்கறண்டியுடன், பனி அள்ளப் போன போது கூட நினைத்திருக்க மாட்டார், இனி தான், சுகமாக வீட்டினுள் நடந்து வருவேனென்று.
இவை தான் விதியின் விளையாட்டோ ?..
வாசலில் ஏதோ சத்தம் கேட்டது..
சிந்தனை சற்றே தடைப்பட்டது
கூடவே தபால் பெட்டி மூடிடும் சத்தமும் கேட்டது.. நிச்சயம் இது தபால் காரர் தான். வந்த மடல்களை என் வீட்டு வாசலில் இருக்கும் தபால் பெட்டியினுட் போட்டு விட்டுப்
போய்க்கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.
ஓடிச் சென்று என்ன மடல் ? யாருக்கு வந்திருக்கிறது ? என்று பார்க்க மனம் எண்ணவில்லை.. என்ன.. மிஞ்சிப் போனால், பில்கள் தான் வந்திருக்கும்.
இந்தக் காலங்களில் எங்கே பாசக் கடிதங்கள் பரிமாறப்படுகின்றன ?
அவை கூட இணையம் வந்த பின் இணைய மடல் மூலம் தானே பரிமாறப்படுகின்றன.
வருவதாக இருந்தால், வாயு பில், மின்சார பில், தொலைபேசி பில், தண்ணீர் பில், அல்லது விசா அட்டைகள் பில்.. இப்படி ஏதாவது ஒன்று தானே!
பின்னர் பார்க்கலாம் என்று, படுதிருந்த இடத்தை விட்டு எழுந்திட மனமில்லாது படுத்துக் கிடந்த படி முகட்டை அண்ணார்ந்து பார்தேன்.
யாரும் இல்லாத தனிமை தான், எத்தனை அற்புதமானது.. எத்தனை தத்துவங்களை மனதுக்குள் கொண்டு வந்து சேர்த்துப் போகும் ?
அதிலும் இந்த சாவு பற்றிய செய்தி கேட்ட நேரம்.. மிக கவனமான நேரமாக இருந்தது எனக்கு.
65 வருடங்கள்.. 65 வருடங்கள் இதே மண்ணில் மடியில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, வாழ்ந்து, பார்த்த மனிதர்…
65 வருடங்களும் இந்தப் பனியை உடலில், உள்ளத்தில், உணர்வுகளில் சுமந்து தானே இவர் வாழ்ந்திருப்பார்..
இன்று மட்டும் என்ன வந்தது இந்தப் பனிக்கு ? அவர் மீது என்ன ஆத்திரம் ?
ஆத்திரமா ? இல்லை நேசமா ? சொல்லத் தெரியவில்லை எனக்கு..
பாவம் அவர் மனைவி…
நம்மூரில் கணவருக்கு முன்னரே தான், தீர்க்க சுமங்கலியாகப் போய்விட வேண்டும்
என்று ஆசைப்படும் பெண்கள் இருப்பது போல் இவருக்குக் கூட ஆசை இருந்திருக்கலாம். அல்லது இல்லாது விட்டிருக்கலாம்..
ஆனால்… இன்று.. இருவரும்.. ஒன்றாக பனி அள்ளிக் கொண்டிருக்கும் போது இந்த அபத்தம் நடந்தது.. இன்னும் அவர் கண்முன்னே கணவன் துடித்தது..
அவர் இறந்ததது.. என்று எத்தனை ஞாபகங்கள் அவர் நினைவில் இனி வரும்
நாட்களில், அதுவும் அவர் உயிர் வாழப்போகும் பனி நாட்களில் நினைவுகளில் வந்து நின்று வருடப் போகின்றனவோ ?
எல்லாம் காலம் இட்ட தீர்ப்பு தானே ?
பனியின் மடியில் உறங்கும் உடல்களே! சாந்தி பெறுங்கள்…

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி