காதலே

This entry is part of 45 in the series 20030302_Issue

பவளமணி பிரகாசம்


மனதில் புகுந்த காதலே,
மணம் நிறைந்த மலரே,
புன்னை மர நிழலே,
முன்னைப் பிறவி பலனே,
கடலின் குறு மணலே,
கனவின் மறு உருவே,
பூவில் ஊறும் மதுவே,
நாவில் இனிக்கும் நாமமே,
புதிதாய் புலர்ந்த பொழுதே,
முதிர்ந்த உலக ஞானமே,
புல்லில் முளைத்த பூவே,
கல்லில் வடித்த கலையே,
நிலவின் குளிர் கதிரே,
நினைவில் சுழல் புதிரே,
கானல் நீரின் அலையே,
காலம் கடந்த நிலையே,
கவிஞர் தேடும் கருவே,
புவியில் வளரா தருவே,
குழிக்குள் பதுங்கும் நண்டே,
குடைந்தெடுக்கும் வண்டே,
சிறகை நீவும் அலகே,
சிரசில் உதித்த சுரமே,
நழுவிச் செல்லும் வாய்ப்பே,
தழுவிக் கொல்லும் காற்றே,
அமைதி குலைக்கும் வதமே,
சுமையாய் வலிக்கும் இதமே,
உரலை குத்தும் உலக்கையே,
உடலை தாக்கும் வெக்கையே,
எளிதில் பரவும் வியாதியே,
எதிலும் அடங்கா நியதியே,
முதலாய் முளைத்த புள்ளியே,
முள்ளாய் கிளிக்கும் கள்ளியே,
பலவாய் விரவிய வேடமே,
பாரினில் பரவிய கபடமே,
இனங்காணாத வடிவே,
இதற்கு இல்லை முடிவே.

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation