என்னோடு நீ…

This entry is part of 45 in the series 20030302_Issue

மணவழகன். ஆ


விட்டுவிடத்தான் நினைக்கிறேன்,
விடாமல் பிடிக்கிறாய்..!
சட்டென்று வெறுக்கிறேன் – என்
சரீரத்தில் கலக்கிறாய்..!

தாய் மடியும் அவள் தாலாட்டும் – நான்
தன்நிலை உணரும் வரை!
தலை நிமிர்ந்து பார்த்த வேளை – உன் மடி
தாங்கியிருந்தது என் தலை!

நான் இருப்பதுவும் – இன்றும்
இயங்குவதுவும் – என்றும்
உன்னால் தானே!

உறவென்னை வெறுத்தபோதும்..
உற்றாருக்கு நான் கசந்தபோதும்… – என்
உறவென்று உடன் வந்தது – உண்மையில்
நீ மட்டும் தானே..!

பரந்து, விரிந்த இப்புவியில் – உன்
பார்வையில் பட்டது நான் தானே!
என்றென்றும் ‘கூட இருப்பேன் ‘
என்பது நீதானே!

என் தமிழிற்கு உரமிடுவாய்..
என் தாகத்திற்கு நீரிடுவாய்..
தரணியிலே என்னை இனங்காட்ட,
‘தார்மீகப்பொறுப்பு ‘ நான் என்பாய்!

ஓய்ந்து, ஒடுங்கியிருப்பேன்
ஒருவேளை நீ இல்லாதிருந்திருந்தால்!
எங்கோ ஒரு மூலையில்
என்றைக்கோ முடங்கியிருப்பேன்..
என்னுள்ளே நீ வாழாதிருந்திருந்தால்!

‘இறக்கும் ‘ அந்த நாளில்தான்
‘இருந்ததே ‘ தெரியும் – பல,
‘வீணர்களைப் ‘ போலே – நானும்,
‘வீணாக வாழ்ந்திருப்பேன் – என்னுள் நீ
விழாமல் இருந்திருந்தால்.!

உருண்டு உருண்டு உழல்கிறேன் – என்றும்
ஓயாமல் உழைக்கிறேன்!
ஒரு நொடி நீயும் தள்ளி நின்றால்…
உண்மையில் நானும் இறக்கிறேன்!

‘உறங்கும் வேளை உள்ளத்துள்,
உறங்காதென்றும் உன்நினைவு!
உறங்கினாலும் என்னுள்ளே,
உன் முகம் காட்டும் பல கனவு!

மானுடத்தை இனமறிய,
மனிதர்களின் குணமறிய
என்னால் கூட முடிகிறது…
என்னோடு நீ இருப்பதாலே..!

சிறுபிள்ளை நான்
சிலவேளை உன்னை வெறுத்தாலும்… – என்
செல்ல ‘ ‘வறுமை ‘ ‘ யே – உயிர்
செல்லும் வரையில் பிரியாதே!
ஆம்,
‘இன்னும் நான் சாதிக்கவேண்டும். ‘

****
a_manavazhahan@hotmail.com

Series Navigation