காதலர் தினக் கும்மி

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

பசுபதி


காதலர் நாளும்பி றந்ததடி — நம்
. . கண்ணியம் பண்பாடி றந்ததடி!
மேதினி போகுமிவ் வேதனையை — பார்த்து
. . வெட்கியே வானம் சிவக்குமடி! (1)

ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு –அது
. . அன்றாட வாழ்விலோர் அங்கமடி!
வேண்டாப் பொருள்களை அங்காடிகள் — சேர்ந்து
. . விற்கவே செய்திடும் சூழ்ச்சியடி! (2)

காதல் கடைச்சரக் கானதடி ! — பணங்
. . காசெனும் மீன்பிடி தூண்டிலடி!
காதலே ஓர்பரி சென்றிடுவார் ! — அந்தக்
. . காதல் பரிசால் கிடைத்திடுமோ ? (3)

பண்டையில் காம தகனம்;இன்றோ — பரிசுப்
. . பண்டத்தில் காசை எரித்திடுவர் !
வண்ண மலர்க்கொத்து வாங்குகிறார் — தினம்
. . மாலையில் மல்லிக்க தீடாமோ ? (4)

பாதி உடையிலே ஈசுகிறார் — நடைப்
. . பாதை, கடற்கரை, வண்டியிலே !
காதலின் உச்சமோ ‘பச்சை ‘யடி! — அதைக்
. . கட்டிலொன் றேகாண வேண்டுமடி! (5)

நேர்மை இலாதது காதலன்று — வெறும்
. . நேரம் கழிப்பது காதலன்று !
ஈர்க்கும் உடையும், உடற்பசியும் — பருவ
. . ஏக்க விளைவுகள் காதலன்று ! (6)

கொச்சைப் படுத்துதல் காதலன்று — பூங்காக்
. . கொட்டம் அடிப்பது காதலன்று !
இச்சை உணர்வு புனிதமெய்தி — பின்
. . ஈருயிர்ச் சங்கமம் காதலடி ! (7)

~*~o0o~*~
pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி