எங்குரைப்பேன் நன்றி

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

அபுல் கலாம் ஆசாத்


தலைமுறையின் இடைவெளியால் தர்க்கம் செய்தே
தந்தைமனம் நோகடித்த பிள்ளை நானும்
விலையில்லா உறவினையே மரணம் வந்து
விலக்கிவைத்த பின்னாலே பட்டு ணர்ந்து
தலையடித்துத் தவறுணருந் தன்மை யோடு
தவித்தாலும் நன்றிசொல முற்பட் டாலும்
நிலையில்லா உலகினிலே ஈங்கோர் நன்றி
நீத்தார்க்குத் தெரிவிக்கும் வழியறி யேனே!

ஆதாரக் கல்வியுடன் தொழிலைக் காட்டி
அதிலேநீ முன்னேற்றம் கண்டால் நாளை
சேதாரம் இல்லாமல் வாழ்வா யென்றே
சொல்லாமல் சொன்னவரும் எந்தன் தந்தை!
“நீதாண்டா எல்லாமே” என்று ரைத்து
நித்தம்என் நலனுக்கே தான்உ ழைத்து
தோதான போதில்தன் சுமையைக் கொஞ்சம்
துளிபோலக் காட்டியவர் என்றன் தந்தை!

வீட்டைநான் பிரிந்தேகிப் பிழைப்பைத் தேடி
வெயில்மேவும் அரபகத்தில் தனியே வாழும்
பாட்டைக்கு வழிகாட்டி வந்தார் இன்றோ
பரம்பொருளின் அடிசேர்ந்தார்! அவரக்கென் நன்றி!
கேட்காமல் கேட்டெந்தன் கவன மெல்லாம்
கைக்கொண்டத் தொழிலோடு சேர்ந்தி ருக்க;
ஆட்கொண்ட நினைவெல்லாம் பந்தம் பாசம்
ஆக்கியவர் அவரன்றோ! சொல்வேன் நன்றி!

இதுவரையில் இப்படியோர் இழப்பைக் காணா
என்நெஞ்சம் ஒருவேளை நாளை ஏதும்
புதுவருத்தம் கொண்டிடுமோ ? பழக்கம் இன்றிப்
பரிதவித்துப் போய்விடுமோ என்றே எண்ணி
எதுவரையில் நிற்கின்றேன் என்றே பார்க்க
இறந்தாரோ நானறியேன் இறைவன் சாட்சி!
முதுமையதன் முடிவுரையை எழுதிக் கொண்டார்
முடிந்துவிட்டார் எங்குரைப்பேன் நானென் நன்றி ?
————————————–

அபுல் கலாம் ஆசாத்

azad_ak@yahoo.com

Series Navigation

அபுல் கலாம் ஆசாத்

அபுல் கலாம் ஆசாத்