உழவன்

This entry is part of 35 in the series 20030215_Issue

தேன்சிட்டு.


காய்ப்படைந்த கைகள்,
வெயிலால் சுடப்பட்டு
கருமை ஏறிய தேகம்,
மண்ணோடு பழகிப் போன பாதம்,
குழிந்த வயிறு,
கூடு கட்டிய நெஞ்செலும்பு,
வானம் பார்த்தே தேய்ந்த இமை,

யார் அது ? ஓரமாய்..
உதிர்ந்து விட்ட ஒரு துளியாய்..
நடு நிசி நேரத்தின்
விசும்பல் சத்தங்கள்
அறுந்து போன இழையாய் …

பொலிவிழந்த ஓவியம் இன்று,
பொடிப் பொடியாய்
நொறுங்கியது இங்கே …

கண்ணீர் பொய்த்தாலும்,
உள்ளுக்குள் ஓடியாடும்
உதிரம் சிந்தி,
வளர்த்த பயிரெல்லாம் வாடியதே ..
வானமும் தந்திடுமா கண்ணீரை ?

மண் வாசமாம், நம் சுவாசத்தின்
தலைப் பாகையில் தங்க கிரீடமாம்
தமிழுக்கே, தனிச் சிம்மாசனமாம்
தேர்தல் களத்தில் மட்டும்
வானைத் தொடும் வாக்குறுதிகள்
வண்ண வண்ணமாய் !!

முப்போகம் விளைந்திடுமா ?
முரசு கொட்டும் நாள் வருமா ?
கல்லறையிலேனும்
‘கழனி செய்யுங்கள் ‘
உதிரும் உழவனின் ஓலக் குரலே
ஓங்கி ஒலிக்கிறது எங்கெங்கும்….

காளை பூட்டிய கட்டை
வண்டிகள் குலுங்கி நடக்க,
நாட்டுப் பாடல்கள்
நான்கு திசையும் ஒலித்து சிரிக்க,
உதவியென்னும் ஒளிக் கரத்தால்
வளைந்து போன முதுகினை
வாளாக்கும் நாள் வருமா ?

thenchittu@yahoo.com

Series Navigation