வாசித்து முடித்த குழு – உரை வெண்பா

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


எங்க ஊரில் (ஹாலிஃபாக்ஸ், மேற்கு யார்க்ஷயர், இங்கிலாந்து) இருக்கப்பட்ட தொண்ணூறு சதவிகிதக் கட்டிடங்கள் விக்டோரியா மகாராணி காலத்துப் பழையவை என்றால், அவற்றுக்கெல்லாம் பாட்டியம்மாவானது, தொழில் புரட்சி காலத்துப் புராதனக் கட்டடமான பீஸ்ஹால். (Piece Hall)

1766-ல் வீட்டில் தறிநெய்து துணி தயாரித்துக் கொண்டுவந்து இங்கே நெசவாளர்கள் விற்கும்போது வாங்கக் கூட்டம் அலைமோதுமாம். கட்டடத்தின் பெயரில் இருக்கும் பீஸ், துணிப்பீஸ்தான்.

நத்தார்தினம் (கிறிஸ்துமஸ்) வந்ததால் பீஸ்ஹால் அண்மையில் விழாக்கோலம் பூண்டிருந்தது. வானம் பார்க்கத் திறந்த இத்தாலிய பாணிக் கட்டிட வளாகம் முழுக்க நம் அண்டை அயல்காரப் பாக்கிஸ்தானியர்கள் (யார்க்ஷயரில் இவர்கள் ஜனத்தொகை அதிகம்) கூடாரம் அடித்து காலுறை, மார்க்கச்சை, பனியன், தோல் செருப்பு என்று விற்றுக் கொண்டிருக்க, நடுவில் மேடையில் விதவிதமான இசைக்குழுக்கள் பார்வையாளர்களை மகிழ்விக்க இசைநிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தன.

பக்கத்து பர்மிங்ஹாமிலிருந்து ஓர் ஆந்திரமாமி வந்து பரதநாட்டியப் பட்டறை என்று சொல்லி, பிருஷ்டம் பெருத்த வெள்ளைக்காரர்களை இருபது நிமிஷம் தையத்தக்கா என்று குதிக்க வைத்து இதுதான் பரதநாட்டியம் என்று புன்னகைத்தார். புத்தறிவு பெற்ற ஒளி முகத்தில் திகழ அவர்கள் காலை அகல வைத்து நடந்து போனார்கள்.

மாமியோடு பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய பரதநாட்டியப் பட்டறைக்கு அரசாங்கக் கொடை (grant) கிடைப்பதாகத் தெரிந்தது.

ஆனால் பீஸ்ஹாலில் இசைக்கும் எல்லோருக்கும் அரசாங்கத்தின் கருணாகடாட்சம் கிட்டுவதில்லை. நத்தார் தினத்துக்கு ஒரு வாரம் முன் அங்கே ஓர் இசைக்குழு. கிட்டத்தட்ட முதியவர்கள் எல்லோரும். அருமையாக ஸ்காட்லாந்து இசையை வாசித்தார்கள். முடித்துக் கீழே இறங்கி, பிளாஸ்டிக் வாளிகளைக் குலுக்கிக் கொண்டு வர, அதையும் இதையும் வாங்கிக் கொண்டு கூட்டம் தன்பாட்டில் கலைந்து போய்க் கொண்டிருந்தது.

அந்த முதியவர்கள் ராத்திரி சாப்பிட்டார்களா என்று தெரியாது. என்னுடைய ஒரு பவுண்டில் என்ன வாங்கி இருக்க முடியும் ? நான் புறப்பட்டுப் போனபிறகு யாராவது காசு போட்டார்களா ?

பனிவிழும் மாலையில் பார்த்தோர் நகர
இனிவரும் காசுகள் எண்ணிக் – குனிந்துதான்
யாசிக்கும் கண்ணொடு யோசித்து நின்றிடும்
வாசித்தே ஓய்ந்த குழு.

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்