சின்னவரே! சின்னவரே!

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

புகாரி, கனடா


அலைமேல் தவறிய
துரும்புகளாய்
ஆசைக் கரைகள்
சேரும்வரை

தலைகால் புரியாத்
தத்தளிப்பில்
தடங்கள் மாறும்
சின்னவரே!

O

நீதியும் நியாயமும்
தின்றுவிட்டு
நித்திரை என்பதும்
வருவதில்லை

ஆசைகள் இல்லா
இதயமில்லை
ஆசைகள் இன்றிச்
சுகமுமில்லை

O

செதுக்கிய ஆசைகள்
சந்தோசம்
செதுக்கா ஆசைகள்
சிறைவாசம்

புதுப்புது ஆசைகள்
பூக்கவிடு
பொசுங்கிய ஆசையைத்
தூக்கிலிடு

O

எட்டாக் கிளைக்கும்
திட்டமிடு
எட்டிய கனிகளை
முத்தமிடு

வெட்டிப் போனதை
விட்டுவிடு
எட்டிப் புதியதைத்
தொட்டுவிடு

O

கெட்டவை மிஞ்சிய
கூடுகளில்
கொட்டுந் தேளே
குடியிருக்கும்

ஒட்டிய வயிறு
வெந்தாலும்
உண்ண விசமுந்
தொடுவோமோ ?

O

நல்லதை அறியும்
மனம்வேண்டும்
நல்லதைச் சுவைக்கும்
நாவேண்டும்

நல்லதும் கெட்டதும்
நம்மோடு
நல்லதைக் கொண்டே
சுகம்தேடு.

buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி