கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


(எங்க ஊர் செய்தித்தாளில் வந்த விஷயம். இதைத் தாத்தா காலத்துப் பழைய ரிப்போர்ட்டிங் ஸ்டைலில் எழுதிப்பார்க்கலாம் ..)

உபயகுசலோபரி.

இவ்வ்ிடம் மேற்கு யார்க்ஷயர் பேட்டை ஒன்றில் வெகு விநோதமாக ஒரு கிளி வந்து சேர்ந்திருக்கிறது. யாரோ வார்த்தை சொல்லிக் கொடுத்துப்
பழக்கிய கிளி. வாயைத் திறந்தால் ஒரே வசவும் திட்டும் தான் பாஷ்பமாகப் பொழிகிறது.

மேற்படிக் கிளியானது பிராந்தியத்திலேயே உயரமான மாதா கோவில் மணிக்கூண்டுக் கோபுரத்துக்குக் குடி பெயர்ந்திருப்பது சான்றோர்களளயும் சாது
ஜனங்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அந்த வசதியான உயரத்தில் உட்கார்ந்தபடி, கோவிலில் பூசை வைக்கப் பாதிரியார் நடந்து வரும்போது துரைத்தனத்தார் பாஷையில் ‘F ‘ என்று
தொடங்கி ‘K ‘ என்ற எழுத்தில் முடியும் ஆபாசமான சொல்லை உரக்கச் சொல்லி அவருக்கு முகமன் கூறுகிறதாம் ஷெ கிளி.

மேலும் அது, மாதாகோவிலில் பிரார்த்தனை நடக்கும்போது அங்கே கூடி இருக்கும் பக்த ஜனங்கள் எல்லோரையும் வீட்டுக்குச் சடுதியில்
புறப்பட்டுப் போய் சிற்றின்ப நுகர்வில் ஈடுபடும்படி வலியுறுத்தியபடி கோவ்ிலுக்குள் குறுக்கும் நெடுக்கும் பறக்கிறதாகவும் ப்ரஸ்தாபம்.

‘கோவிலில் பிரார்த்தனையோ, கல்யாணமோ நடக்கும்போது இந்த ஜந்து இப்படியான துர்ச்செயல்களில் ஈடுபட்டால் தாழ்வில்லை தான். இந்தக்
கூத்துக்குச் சிரிப்பாய்ச் சிரிக்கிற யுவன்களும் யுவதிகளும் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அந்தோ, சாவுச்சடங்கு நடக்கும்போதும் கிளி
பறந்து வந்து வசவு மழை பொழிகிறதே . என் செய்வோம் ? ‘ என்று ஊர்ப் பிரமுகர்களும் வெகுஜனங்களும் பிரலாபிக்கிறார்களாம். ராஜாங்கப்
பிரதிநிதிகளும் உத்தியோகஸ்தர்களும் வழக்கம்போல் இதை எல்லாம் காதில் வாங்காமல் அவரவருக்கு ஸ்வபாவமான காரியங்களில் மூழ்கிக்
கிடக்கிறார்களாம்.

இதைப் படிக்கும் கனவான்களும் நற்பெண்டிரும் ஸ்ரீரங்கத்தாராகிய சுஜாதா என்ற ப்ரக்யாதி பெற்ற பண்டிதர் இயற்றிய விநோதரச வேடிக்கைக் கதை
ஒன்றில் இங்ஙனம் கெட்ட வார்த்தை சொல்லும் ஒரு கிளியை மையமாக வைத்து எழுதியிருப்பதை அறிவீர்கள் அல்லவோ!.

அது நிற்க.

மேற்கு யார்க்ஷயர் கிளி குறித்து யான் யாத்த வெண்பா ஒன்றினை இங்கே இட உத்தரவு வேண்டுகிறேன். சொற்குற்றம், பொருட்குற்றம் காண்கில்
ஐயன்மீர் மன்னிப்பீராக.

கோயில் மணியின் குரலும் ஒடுங்கிட
வாயில் அழுகை உயர்ந்திடும் – சாவில்
அசைவு மறந்த சடலம் சிரிக்க
வசவு மொழியும் கிளி.

தாசன்,
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்
eramurug@yahoo.com

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்